/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வீடு கட்ட அனுமதி வழங்க லஞ்சம் பொறியாளருக்கு 2 ஆண்டு சிறை
/
வீடு கட்ட அனுமதி வழங்க லஞ்சம் பொறியாளருக்கு 2 ஆண்டு சிறை
வீடு கட்ட அனுமதி வழங்க லஞ்சம் பொறியாளருக்கு 2 ஆண்டு சிறை
வீடு கட்ட அனுமதி வழங்க லஞ்சம் பொறியாளருக்கு 2 ஆண்டு சிறை
ADDED : ஜூன் 01, 2024 04:31 AM
செங்கல்பட்டு : வீடு கட்டுவதற்கு கட்டட அனுமதி வழங்க லஞ்சம் வாங்கிய வழக்கில், உதவி செயற்பொறியாளருக்கு, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, செங்கல்பட்டு கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது.
சென்னை, ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கமலகண்ணன் என்பவர், அதே பகுதியில், இந்திரா நகரில் புதிதாக வீடு கட்டுவதற்கு கட்டட அனுமதி பெற, 2008ம் ஆண்டு ஏப்., மாதம் 17ம் தேதி, ஆதம்பாக்கம் உதவி செயற்பொறியாளர் வேல்முருகன், 57, என்பவரை அனுகினார்.
அப்போது, வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்க, 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத கமலகண்ணன், சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில், அதே மாதம் 22ம் தேதி புகார் அளித்ததை அடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தொடர்ந்து, ரசாயனம் தடவிய 5,000 ரூபாயை, போலீசார் கமலகண்ணனிடம் கொடுத்து அனுப்பினர். அந்த பணத்தை கொடுத்தபோது, போலீசார் மடக்கிபிடித்து, வேல்முருகனை கைது செய்தனர்.
அதன்பின், சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் இருந்து, செங்கல்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு, வழக்கு மாற்றப்பட்டது.
இவ்வழக்கு விசாரணை,செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிபதி ஜெயஸ்ரீ முன்னிலையில் நடந்து வந்தது. அரசு தரப்பில், வழக்கறிஞர் கவிதா ஆஜரானார்.
வழக்கு விசாரணை முடிந்து குற்றம் நிரூபிக்கப்பட்டதால், வேல்முருகனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.
லஞ்சம் சம்பந்தமான புகாருக்கு, செங்கல்பட்டு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலக எண் 044 - 2746055 தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என, லஞ்ச ஒழிப்பு போலீசார்தெரிவித்தனர்.