/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரூ.20 லட்சத்தில் நாய்கள் கருத்தடை கூடம் செங்கை நகராட்சி நடவடிக்கை
/
ரூ.20 லட்சத்தில் நாய்கள் கருத்தடை கூடம் செங்கை நகராட்சி நடவடிக்கை
ரூ.20 லட்சத்தில் நாய்கள் கருத்தடை கூடம் செங்கை நகராட்சி நடவடிக்கை
ரூ.20 லட்சத்தில் நாய்கள் கருத்தடை கூடம் செங்கை நகராட்சி நடவடிக்கை
ADDED : ஜூலை 17, 2024 10:24 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகராட்சியில், தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் கூடம் அமைக்க, 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
செங்கல்பட்டு நகராட்சியில், பராமரிப்பின்றி தெருவில் வளரும் 2,000த்துக்கும் மேற்பட்ட நாய்கள் உள்ளன. இதில், சில நாய்கள் ரேபீஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளன.
அவை நோய் முற்றி, வெறிபிடித்து, அவ்வப்போது குழந்தைகள் மற்றும் முதியோரை கடித்து வருகின்றன. கடிபட்டவர்கள் தடுப்பூசி போடவில்லை என்றால், அவர்களுக்கும் ரேபீஸ் நோய் வர வாய்ப்பு உள்ளது.
இதனால், மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், நாய் கடிக்கான தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது.
நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
நகராட்சி சார்பில், தெரு நாய்களை பிடிக்க வாகனம் மற்றும் நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளன.
அதன்பின், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், நாய்களுக்கு கருத்தடை செய்ய, தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் விடப்பட்டது.
அதன்பின், தனியார் அமைப்பினர் சார்பில் தெருக்களில் சுற்றித்திரிந்த நாய்கள் பிடிக்கப்பட்டு, கருத்தடை அறுவை சிகிச்சை அரங்கத்தில் கருத்தடை செய்யப்பட்டு வந்தது.
இதில், 25க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்தன. அதன்பின், தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து, கருத்தடை செய்யும் நடவடிக்கையை, நகராட்சி நிர்வாகம் கைவிட்டது.
இந்நிலையில், மார்க்கெட், பஜார், மேட்டுத்தெரு உள்ளிட்ட பகுதிகளில், கடந்த மாதத்தில் மட்டும் நுாறுக்கும் மேற்பட்டோரை வெறி நாய்கள் கடித்துள்ளன.
இதனால், தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த, நகராட்சி நிர்வாகம், புளூ கிராஸ் அமைப்புடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நகராட்சி நிர்வாகத்திடம் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதைத்தொடர்ந்து, நகராட்சி பகுதியில், நாய்களின் பெருக்கம் மற்றும் அவற்றால் ஏற்படும் ஆபத்துகள் அதிகரித்து வருவதை தடுக்க, நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்பின், 21வது வார்டில் ராமபாளையம் பகுதியில், நாய்களுக்கு கருத்தடை செய்வதற்கான கூடம் அமைக்க, 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, கடந்த 10ம் தேதி நகரசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இப்பணிகளை விரைந்து துவக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.