/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் தலைதுாக்கும் பேனர் கலாசாரம் கவலைக்கிடம்!: நீதிமன்ற உத்தரவு காற்றில் பறக்கும் அவலம்
/
செங்கையில் தலைதுாக்கும் பேனர் கலாசாரம் கவலைக்கிடம்!: நீதிமன்ற உத்தரவு காற்றில் பறக்கும் அவலம்
செங்கையில் தலைதுாக்கும் பேனர் கலாசாரம் கவலைக்கிடம்!: நீதிமன்ற உத்தரவு காற்றில் பறக்கும் அவலம்
செங்கையில் தலைதுாக்கும் பேனர் கலாசாரம் கவலைக்கிடம்!: நீதிமன்ற உத்தரவு காற்றில் பறக்கும் அவலம்
ADDED : ஜூலை 13, 2024 10:11 PM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், நீதிமன்றங்கள் உத்தரவை மீறி, விளம்பர பதாகைகள் அதிகரித்து வருகிறது. சாலைகளில் வைக்கப்படும் விளம்பர பதாகைகளால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதற்குள் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில், போக்குவரத்து நிறைந்த சாலைகளில், விளம்பர பதாகைகளால் விபத்துகள் ஏற்படுகிறது. இதனால், பலர் உயிரிழக்கும் சம்பவமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதைத் தொடர்ந்து, விளம்பர பதாகைகள் அமைக்க, உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
அதன்பின், பேருந்து நிலையம், முக்கிய சாலை சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில், விளம்பர பதாகைகள் வைக்க, தமிழக அரசு 2020ம் ஆண்டு தடை விதித்தது.
இந்த உத்தரவிற்கு பின், விளம்பர பதாகை வைக்கும் கலாசாரம் குறைந்தது. விளம்பர பதாகைகள் வைக்க, உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற வேண்டும் என, அரசு உத்தரவிட்டது.
அனுமதி பெற்ற பிறகே விளம்பர பதாகைகள் வைக்க வேண்டும். ஆனால், இந்த உத்தரவை அலட்சியப்படுத்தி விட்டு, அரசியல் கட்சியினர் மற்றும் தனியார் அமைப்பினர் விளம்பர பதாகைகள் வைக்கின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை, பேருந்து நிறுத்தங்கள், சாலை சந்திப்புகள் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில மாதங்களாக விளம்பர பதாகைகள் அதிகரித்து வருகின்றன.
மேலும், தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுர்களின் இல்ல திருமணம், அரசியல் கட்சி கூட்டங்களில், அனுமதி இல்லாமல் விளம்பர பதாகைகள் வைக்கின்றனர்.
செங்கல்பட்டு நகராட்சி பகுதியில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பயணியர் நிழற்குடையில் காத்திருந்து, பயணியர் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர்.
இங்கு, விளம்பர பதாகைகள் வைத்துள்ளதால், சாலையில் நிற்கும் பயணியர் விபத்து அச்சத்துடன் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
செங்கல்பட்டு -- திருக்கழுக்குன்றம் சாலையில், ரயில்வே மேம்பாலம் பகுதியில் உள்ள ரவுண்டான பகுதியில், அரசியல் கட்சியினர், தனியார் நிறுவனங்கள் விளம்பர பதாகைள் வைத்துள்ளனர்.
ரவுண்டான வழியாக பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.
புறவழிச்சாலைகளிலும், விளம்பர பதாகைள் அதிகரித்து வருகின்றன. மாவட்ட தலைநகரிலேயே இந்த நிலை என்றால், மற்ற பகுதிகளின் நிலைமை படுமோசமாக உள்ளது. ஆனால் நகராட்சி, பேருராட்சி மற்றும் உள்ளாட்சி பகுதிகளில், அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர்.
இதனால், மாவட்டத்தில் விளம்பர பதாகை கலாசாரத்தை கட்டுப்படுத்த, கலெக்டர் அருண்ராஜ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
நகராட்சி சார்பில் விளம்பர பதாகைகள் வைக்க, யாருக்கும் அனுமதி வழங்கவில்லை. அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
பெ.ஆண்டவர்,
நகராட்சி ஆணையர்,
செங்கல்பட்டு.