/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஒருநாள் கல்வி சுற்றுலா சென்ற 1,200 மாணவ, மாணவியர்
/
ஒருநாள் கல்வி சுற்றுலா சென்ற 1,200 மாணவ, மாணவியர்
ADDED : ஜூன் 05, 2025 02:02 AM

திருப்போரூர்,:அரசுப் பள்ளி மாணவர்களை ஒரு நாள் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல, செங்கல்பட்டு மாவட்ட பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இ.சி.ஆர்., சாலை, முட்டுக்காடு பகுதியில் தென்னிந்தியாவின் கலை, கட்டட கலை, வாழ்க்கை முறைகள், கைவினை பொருட்கள் போன்றவற்றை ஒரே இடத்தில் அறிந்து கொள்ளும் விதமாக, தட்சிணசித்ரா அருங்காட்சியகம் அமைந்துள்ளது.
இதனால், பாரம்பரிய கலைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, தட்சிணசித்ரா அருங்காட்சியகத்திற்கு பள்ளி மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டது.
அதன்படி நேற்று முதற்கட்டமாக, ஒரு நாள் கல்வி சுற்றுலாவாக, திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய 14 பள்ளிகளிருந்து, 6 முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் 1,200 மாணவ, மாணவியர், தட்சிணசித்ரா அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
திருப்போரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து புறப்பட்ட இந்த கல்வி சுற்றுலா வாகனங்களை, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சுற்றுலா சென்று பார்வையிடும் மாணவர்கள், அங்கு பார்த்தது, தெரிந்து கொண்டது குறித்த அறிக்கையை எழுதி, அந்தந்த பள்ளி ஆசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அதில் சிறந்த அறிக்கை எழுதிக்கொடுத்த மாணவர்களுக்கு, ஊக்கப்பரிசுகள் வழங்க வேண்டும் என, ஆசிரியர்களிடம் கலெக்டர் தெரிவித்தார்.
கோடை விடுமுறை முடிந்து, நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியர், கல்வி சுற்றுலாவிற்கு மகிழ்ச்சியுடன் சென்றனர்.