/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கார்கள் நடைபாதையிலும் சாலையில் பாதசாரிகளும்
/
கார்கள் நடைபாதையிலும் சாலையில் பாதசாரிகளும்
ADDED : ஜன 17, 2024 07:31 AM

செம்மஞ்சேரி : ஓ.எம்.ஆரில் இருந்து, பெரும்பாக்கம் நோக்கி செல்லும் நுாக்கம்பாளையம் இணைப்பு சாலை, 80 அடி அகலம் உடையது. ஓ.எம்.ஆரில் மெட்ரோ ரயில் பணி நடப்பதால், இந்த சாலையில் ஆறு மாதங்களாக வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது.
இச்சாலையில், குமரன் நகர் சந்திப்பு அருகே, 3 அடி அகல நடைபாதை உள்ளது. இதில், வரிசையாக கார்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.
சில கார்கள், நடைபாதையில் இருந்து இறங்கி சாலையிலும் நிறுத்தப்பட்டுள்ளதால், பாதசாரிகள் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இரு தினங்களுக்கு முன், இரவில் கார்களை ஒட்டியபடி, சாலையில் நடந்து சென்ற முதியவர் ஒருவர், இருசக்கர வாகனம் மோதி காயமடைந்தார்.
அப்பகுதி மக்கள் கூறியதாவது:
ஒரு மாதமாக, தினமும் இரவில் கார்களை நிறுத்துகின்றனர். நடைபாதையை ஆக்கிரமித்துள்ளதால், சாலையோரம் நடக்கும் பாதசாரிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். போலீசாரிடம் கூறியும், அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
விபரீதம் ஏற்படும் முன், கார்களை அப்புறப்படுத்த, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

