/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிளாம்பாக்கம் முனையத்திற்கு முழுமையாக மாறிய ஆம்னி பஸ்கள் இணைப்பு பஸ் கிடைக்காமல் பயணியர் அவதி
/
கிளாம்பாக்கம் முனையத்திற்கு முழுமையாக மாறிய ஆம்னி பஸ்கள் இணைப்பு பஸ் கிடைக்காமல் பயணியர் அவதி
கிளாம்பாக்கம் முனையத்திற்கு முழுமையாக மாறிய ஆம்னி பஸ்கள் இணைப்பு பஸ் கிடைக்காமல் பயணியர் அவதி
கிளாம்பாக்கம் முனையத்திற்கு முழுமையாக மாறிய ஆம்னி பஸ்கள் இணைப்பு பஸ் கிடைக்காமல் பயணியர் அவதி
ADDED : ஜன 26, 2024 12:03 AM

சென்னை:சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு தினமும் 1,000க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
நேற்று முன்தினம் இரவு 7:00 மணி முதல், சென்னை கோயம்பேடு, எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஆம்னி பேருந்துகளில் பயணியரை ஏற்றிச் செல்லவும், இறக்கி விடவும் தடை உத்தரவு அமலானது.
இந்த மற்றம் குறித்து, முன் பதிவு செய்தவர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்காததால் நேற்று முன் தினம் மாலையில் இருந்து நள்ளிரவு வரை, பெரும் குழப்பம் நீடித்தது.
கோயம்பேடு வந்த பயணியர், கிளாம்பாக்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று முதல் முழுமையாக இயக்கப்பட்டன.
நேற்று காலை, தென் மாவட்டங்களில் இருந்து, 330 ஆம்னி பேருந்துகள் வந்து, பயணியரை இறக்கி சென்றன. நேற்று மாலை, 440 ஆம்னி பேருந்துகள், இங்கிருந்து பயணியரை ஏற்றி, தென் மாவட்ட நகரங்களுக்கு புறப்பட்டு சென்றன.
நேற்று மாலை, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள், கிளாம்பாக்கம் முனையத்தில் பயணியருக்கான வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர்.
அப்போது, ஆம்னி பேருந்து ஓட்டுனர்கள் சிலர் அமைச்சரை வழிமறித்து, போதிய உணவகங்கள், குடிநீர் வசதி இல்லை என்று முறையிட்டனர்.
முன்னதாக, நேற்று காலை கிளாம்பாக்கத்தில் இறக்கிவிடப்பட்ட ஆம்னி பேருந்து பயணியர், அங்கிருந்து சென்னை மாநகரின் பல்வேறு இடங்களுக்கு செல்ல போதிய இணைப்பு பேருந்துகள் இல்லாததால் சிரமப்பட்டனர்.
பயணியர் சிலர் கூறியதாவது:
மாநகரின் பல்வேறு இடங்களுக்கு போதிய அளவில் நேரடி இணைப்பு பேருந்து வசதி இல்லை. மாறி மாறி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அருகில், மின்சார ரயில் நிலைய வசதியும் இல்லை.
கிளாம்பாக்கத்தில் இருந்து வடசென்னை பகுதிகளுக்கு செல்ல, ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் ஆகிவிடுகிறது. கால்டாக்சி, ஆட்டோக்களில் 600 முதல் 1,000 ரூபாய் வரை செலவு ஆகிறது.
கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம், மெட்ரோ ரயில் சேவை இணைப்பு வரும் வரையில், கோயம்பேடு வரை 50 சதவீத ஆம்னி பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

