/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மனைவி இறந்த வழக்கில் திடீர் திருப்பம் பணம் கேட்டு கொன்ற கணவர் கைது
/
மனைவி இறந்த வழக்கில் திடீர் திருப்பம் பணம் கேட்டு கொன்ற கணவர் கைது
மனைவி இறந்த வழக்கில் திடீர் திருப்பம் பணம் கேட்டு கொன்ற கணவர் கைது
மனைவி இறந்த வழக்கில் திடீர் திருப்பம் பணம் கேட்டு கொன்ற கணவர் கைது
ADDED : ஜூன் 05, 2025 09:18 PM
தாம்பரம்:மணிமங்கலத்தை அடுத்த வரதராஜபுரத்தை சேர்ந்தவர் ராஜ்மோகன், 28. தனியார் நிறுவன ஊழியர். அவரது மனைவி ஸ்டெபி மெடில்டா, 22.
இருவரும் காதலித்து, 2024, பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு, ஐந்து மாதம் ஆன பெண் குழந்தை உள்ளது.
திருமணத்தின் போது, பெண்ணுக்கு 40 சவரன், மாப்பிள்ளைக்கு ஐந்து சவரன் மற்றும் 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை, ஸ்டெபி மெடில்டாவின் பெற்றோர் வரதட்சணையாக வழங்கியுள்ளனர்.
திருமணத்திற்கு பின், மனைவியிடம் அடிக்கடி பணம் கேட்டு, ராஜ்மோகன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், மே 3ம் தேதி, மனைவியின் சகோதரர் டார்வினுக்கு போன் செய்த ராஜ்மோகன், ஸ்டெபி மெடில்டா மயக்கமடைந்த நிலையில் கிடப்பதாக கூறியுள்ளார்.
டார்வின் மற்றும் உறவினர்கள் விரைந்து சென்று, மயக்க நிலையில் கிடந்த ஸ்டெபி மெடில்டாவை, பெருங்களத்துாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், வழியிலேயே இறந்தது தெரியவந்தது.
மணிமங்கலம் போலீசார் உடலை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கிடையில், இறந்த ஸ்டெபி மெடில்டா, தான் அனுபவிக்கும் கஷ்டம் மற்றும் கொடுமை குறித்து, அருகே வசிக்கும் தன் தோழிக்கு மொபைல் போனில் அனுப்பிய வீடியோ வெளியானது.
இதையடுத்து, மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக, ஸ்டெபி மெடில்டாவின் பெற்றோர், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கடந்த வாரம் புகார் அளித்தனர்.
இப்புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், சம்பவத்தன்று மனைவியை ராஜ்மோகன் அடித்ததும், அப்போது வீட்டு வாசல்படியில் முட்டி, ஸ்டெபி மெடில்டா தலையில் காயமடைந்ததும் தெரியவந்தது.
பிரேத பரிசோதனை அறிக்கையிலும், தலையில் காயம் ஏற்பட்டது உறுதியானது. இதையடுத்து, இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்த மணிமங்கலம் போலீசார், ராஜ்மோகனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.