sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கிராம சபை கூட்டங்களில் அதிகாரிகள் - மக்கள்...காரசாரம்!:

/

கிராம சபை கூட்டங்களில் அதிகாரிகள் - மக்கள்...காரசாரம்!:

கிராம சபை கூட்டங்களில் அதிகாரிகள் - மக்கள்...காரசாரம்!:

கிராம சபை கூட்டங்களில் அதிகாரிகள் - மக்கள்...காரசாரம்!:


UPDATED : ஜன 27, 2024 07:20 AM

ADDED : ஜன 27, 2024 12:26 AM

Google News

UPDATED : ஜன 27, 2024 07:20 AM ADDED : ஜன 27, 2024 12:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சிகளில் நடந்த கிராம சபை கூட்டங்களில், அதிகாரிகள் மக்களிடையே காரசாரமாக விவாதம் நடந்தது. இரண்டு ஊராட்சிகளில் கூட்டத்தை மக்கள் புறக்கணித்தனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், அச்சிறுபாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனித தோமையார்மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 359 ஊராட்சிகள் உள்ளன. குடியரசு தின விழாவையொட்டி, 357 ஊராட்சிகளில் நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது.

திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில், குன்னத்துார் ஊராட்சி கிராம சபை கூட்டத்தை, இலவச வீட்டுமனை பட்டா வழங்காததால், பொதுமக்கள் புறக்கணித்தனர்.

கிளாம்பாக்கம் கிராம சபை கூட்டத்திற்கு, அனைத்து துறை அதிகாரிகள் வரவில்லை எனக் கூறி, பொதுமக்கள் கூட்டத்தை புறக்கணித்ததாக, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

செங்கல்பட்டு அடுத்த ஆலப்பாக்கம் ஊராட்சியில் நடந்த கூட்டத்தில், ஊராட்சி தலைவர் பரிமளா, ஒன்றிய கவுன்சிலர் நிந்திமதி, வனக்குழு தலைவர் திருமலை, வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

மலையடிவேண்பாக்கத்தில் சமுதாய கூடம் கட்டித்தர, கலெக்டருக்கு கோரிக்கை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திம்மாவரத்தில் நடந்த கூட்டத்தில், செங்கல்பட்டு நகராட்சியுடன் திம்மாவரத்தை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பவுஞ்சூர்


லத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட செம்பூர் ஊராட்சியில், 1.20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

பாலாற்று கூட்டுக்குடிநீரை பங்கிட்டுக் கொள்வதில் நிலவும் கருத்து வேறுபாடுகளை தீர்க்க, தண்டரை முதல் செம்பூர் வரை அமைக்கப்பட்டு உள்ள பழைய இணைப்பை அகற்றி, புதிய குழாய் பதிக்க வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கருப்பு 'பேட்ஜ்'


திருப்போரூர் ஒன்றியத்தில், அனைத்து கிராம ஊராட்சிகளிலும், நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு, சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

கரும்பாக்கம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில், 50க்கும் மேற்பட்டோர் கருப்பு 'பேட்ஜ்' அணிந்து வந்து, பூயிலுப்பை கிராமத்தில் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட சர்வே எண்:166 இடத்தில், மக்கள் பயன்பாட்டிற்கான கட்டமைப்புகளை உருவாக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என, ஊராட்சி பொறுப்பு தலைவரிடம் மனு வழங்கினர்.

தொடர்ந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வருவாய்த் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த தாசில்தார் பூங்கொடியிடம், விளையாட்டு மைதானம், நெற்களம், மயானம் போன்றவற்றிற்கு இடம் ஒதுக்க வேண்டும் என, கோரிக்கை வைத்தனர்.

அதற்கு, கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக, தாசில்தார் கூறியதை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.

கூடுவாஞ்சேரி


ஊரப்பாக்கம் ஊராட்சியில் நடந்த கூட்டத்தில், தெருக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டி புகார் மனுக்கள் வழங்கப்பட்டன.

நெடுங்குன்றம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில், தலைவர் வனிதாவை பொதுமக்கள் முற்றுகையிட்டு, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கல்பாக்கம்


கல்பாக்கம் அடுத்த நெய்குப்பி ஊராட்சியில், தலைவர் அர்ஜுனன், ஊராட்சி அலுவலக வளாகத்தில் தேசியக்கொடி ஏற்றவில்லை.

கிராம சபையில் மக்கள் கூடி காத்திருந்த நிலையில், பகல் 12:00 மணிக்கு பிறகே அவர்கள் வந்தனர். தேசியக்கொடி ஏற்றாதது குறித்து கேட்டபோது, மழுப்பலாக பதில் கூறினர்.

பின் துவங்கிய கூட்டத்தில், ஒரு தரப்பினர், ஒன்றிய சுயேச்சை கவுன்சிலர் சஞ்சய் பங்கேற்றால் தான், கூட்டத்தை நடத்த வேண்டும் என தடுத்தனர்.

வட்டார வளர்ச்சி அலுவலர் லாவண்யா, 'ஒன்றிய கவுன்சிலர் பங்கேற்பது கட்டாயமில்லை' என விளக்கினார். மாலை 3:00 மணிக்கு பின் கூட்டம் துவங்கி, 5:00 மணிக்கு முடிந்தது.

எதிர்ப்பு பேனரால் சலசலப்பு


லத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட கடுகுப்பட்டு ஊராட்சியில், கிராம சபை கூட்டம் நடந்த இடத்தில் ஒருவர், ஊராட்சியில் முறைகேடு நடந்து இருப்பதாக பேனர் வைத்திருந்தார்.'பேனரை அகற்றிவிட்டு, எந்த கேள்வியாக இருந்தாலும் கிராம சபை கூட்டத்தில் கேளுங்கள்' என, ஊராட்சி நிர்வாகம் சார்பாக கூறப்பட்டது.பேனரை அகற்ற, ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பின், பேனர் அகற்றப்பட்டு, கிராம சபை கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டது.



புதுப்பட்டில் சாலை மறியல்


மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட புதுப்பட்டு ஊராட்சியில், கிராம சபை கூட்டம் நடைபெற்றதாக கையெழுத்து மட்டும் வாங்கிக் கொண்டு, கூட்டத்தை முடித்துள்ளனர். இதுகுறித்து, வசந்தி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் தெரிவித்துள்ளார்.சம்பவ இடத்திற்கு நேரில் வருவதாக பி.டி.ஓ., உறுதி அளித்ததால், நேற்று மதியம் 2 மணி வரை, வசந்தி மற்றும் பொதுமக்கள், கிராம ஊராட்சி சேவை மைய கட்டடத்தில் காத்திருந்தனர்.
பகல் 2 மணியை கடந்தும், பி.டி.ஓ., வராததால், வசந்தி மற்றும் ஊர் பொதுமக்கள் மதுராந்தகம் -- உத்திரமேரூர் மாநில நெடுஞ்சாலையில், புதுப்பட்டு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மதுராந்தகம் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் உடன்பாடு எட்டாததால், அனைவரையும் கைது செய்த போலீசார், தனியார் மண்டபத்தில் அடைத்தனர். பின், நேற்று மாலை அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.



- நமது நிருபர் குழு -






      Dinamalar
      Follow us