/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆலம்பரைக்கோட்டை சுற்றுலாத்தளம் மேம்படுத்த பயணியர் வலியுறுத்தல்
/
ஆலம்பரைக்கோட்டை சுற்றுலாத்தளம் மேம்படுத்த பயணியர் வலியுறுத்தல்
ஆலம்பரைக்கோட்டை சுற்றுலாத்தளம் மேம்படுத்த பயணியர் வலியுறுத்தல்
ஆலம்பரைக்கோட்டை சுற்றுலாத்தளம் மேம்படுத்த பயணியர் வலியுறுத்தல்
ADDED : ஜூன் 22, 2025 02:11 AM

செய்யூர்:செய்யூர் இடைக்கழிநாடு பேரூராட்சியில், கடப்பாக்கத்தில் இருந்து 3 கி.மீ., தொலைவில், வங்க கடல் ஓரம் ஆலம்பரை கோட்டை அமைந்துள்ளது.
இது கி.பி., 18ம் நுாற்றாண்டில், செங்கல் மற்றும் சுண்ணாம்பு கலவை கொண்டு, கண்காணிப்பு நிலை மாடங்களுடன் 15 ஏக்கர் பரப்பளவில், முகலாயர்களால் கட்டப்பட்டது.
ஆலம்பரையில் நாணய சாலை இருந்தது. இங்கு, ஆலம்பரை காசு, ஆலம்பரை வராகன் ஆகிய நாணயங்கள் தயாரிக்கப்பட்டன.
கி.பி., 1760 ல் பிரெஞ்சு படையை வெற்றி கொண்ட ஆங்கிலேய படை, இக்கோட்டையை கைப்பற்றி சிதைத்தது.
கோட்டையின் எஞ்சிய பகுதி தற்போது வரலாற்று சின்னமாக காட்சி அளிக்கிறது. மேலும் இயற்கை சிற்றங்களால் கோட்டை மதில்கள் சிதிலமடைந்தன.
கோட்டையை சுற்றிபார்க்க, வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், நுாற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
சினிமா மற்றும் சின்னத்திரை நாடகங்களின் படப்பிடிப்புகளும் அடிக்கடி நடக்கும். வரலாற்று பெருமை பெற்ற தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோட்டை, பராமரிப்பில்லாமல் நாளடைவில் சீர்குலைந்து வருகிறது.
சுற்றுலா பயணியருக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் இல்லை.இளைப்பாற நிழற்குடையோ, கட்டடங்களோ கிடையாது, பாதுகாப்பும் குறைவாகவே உள்ளது.
இக்கோட்டையை சீரமைத்து பாதுகாப்பதுடன் சுற்றுலா பயணியை கவரும் வகையில் பொழுதுபோக்கு மையங்கள், பூங்காக்கள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்துகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பரில் செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் கோட்டைப்பகுதி பார்வையிட்டார். மாடலிங், அவுட்டோர் போன்ற புகைப்படங்கள் எடுக்கும் இடமாக கோட்டை பகுதியை மாற்றி, சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஆனால் ஆலம்பரைக்கோட்டையை மேம்படுத்துவது குறித்து தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, ஆகையால் தொல்லியல் துறை வரலாற்று சிறப்பு மிக்க ஆலம்பரைக்கோட்டை சுற்றுலாத்தளத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.