/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.3 லட்சம் இழப்பீடு தர வாரியத்திற்கு உத்தரவு
/
ரூ.3 லட்சம் இழப்பீடு தர வாரியத்திற்கு உத்தரவு
ADDED : ஜூன் 28, 2024 12:25 AM
சென்னை, அரசு நிறுவனமான வீட்டுவசதி வாரியத்தின் பெசன்ட் நகர் கோட்டம் சார்பில், சோழிங்கநல்லுாரில், 117 வீடுகள் சுயநிதி முறையில் கட்டப்பட்டன. இதில், 2011 மார்ச் மாதம், எம்.முருகன் என்பவர் வீடு ஒதுக்கீடு பெற்றார்.
இதற்காக அவர், எட்டு தவணைகளில், 31.59 லட்சம் ரூபாயை செலுத்தினார். இதற்கான ஒப்பந்தத்தில், 24 மாதங்களில் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு வீடு ஒப்படைக்கப்படும் என குறிப்பிடப்பட்டது.
ஆனால், வீட்டுவசதி வாரியம், மிகுந்த தாமதத்துக்கு பின், 2021ல் முருகனுக்கு வீட்டை ஒப்படைத்தது. அந்த வீட்டில், கட்டுமான ரீதியாக பல்வேறு குறைபாடுகள் இருந்தன.
வாகன நிறுத்துமிடம் ஒதுக்கவில்லை, கழிவு நீர் இணைப்பு வழங்கப்படவில்லை என்பது தெரியவந்தது.
இது குறித்து முருகன், ரியல் எஸ்டேட் ஆணையத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக ஆணையத்தின் விசாரணை அலுவலர், உமா மகேஸ்வரி பிறப்பித்த உத்தரவு:
ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட கால கெடுவுக்குள் வீட்டுவசதி வாரியம், மனுதாரருக்கு வீட்டை ஒப்படைக்கவில்லை.
வீட்டுவசதி வாரியம், சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு, 3 லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்க வேண்டும். மேலும், வழக்கு செலவுக்காக, 50,000 ரூபாய் அளிக்க வேண்டும்
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனியார் கட்டுமான நிறுவனங்கள் மட்டுமல்லாது, அரசு நிறுவனமான வீட்டுவசதி வாரியத்தின் செயல்பாடு தவறாக இருந்தாலும், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டப்படி தீர்வு கிடைக்கும் என்பது இதில் உறுதியாகிறது.