/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நடந்து செல்லக்கூட பாதையில்லை மடிப்பாக்கம் பகுதியில் அவலம்
/
நடந்து செல்லக்கூட பாதையில்லை மடிப்பாக்கம் பகுதியில் அவலம்
நடந்து செல்லக்கூட பாதையில்லை மடிப்பாக்கம் பகுதியில் அவலம்
நடந்து செல்லக்கூட பாதையில்லை மடிப்பாக்கம் பகுதியில் அவலம்
ADDED : ஜூலை 09, 2024 12:10 AM

சென்னை மாநகராட்சியின் பெருங்குடி மண்டலம், மடிப்பாக்கம்,188வது வார்டில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடந்து வருகின்றன.
அங்குள்ள ராஜலட்சுமி நகர், பெரியார் நகரில் தலா பிரதான சாலைகள், குறுக்கு தெருக்கள் என, பத்திற்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. அங்கு, 1,000த்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
அப்பகுதியின் சாலைகளில் ஓராண்டிற்கு மேலாக மழைநீர் வடிகால் பணி நடந்து வருகிறது. இப்பணிகள், அரைகுறையாக ஆங்காங்கே பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், பாதாள சாக்கடை திட்டத்திற்கான, 'மேன்-ஹோல்' மற்றும் குழாய்கள் பதிக்கும் பணியும் நடந்து வருகிறது. ஒப்பந்ததாரர்கள் தங்களின் இஷ்டத்திற்கு பள்ளம் தோண்டிப்போட்டுள்ளனர்.
இதன் காரணமாக இப்பகுதிகளில், சிறிய மழை பெய்தாலும் பல சாலைகள் சகதிகாடாக மாறிவிடுகின்றன. கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் இப்பாதையில் செல்லவே முடியாது.
ஆங்காங்கே சாலை உள்வாங்கியுள்ளதால், இருசக்கர வாகனங்கள் கூட சிக்கிக் கொள்கின்றன. நடந்து செல்பவர்கள் கூட, களிமண் நிறைந்த சகதி சாலையில் வழுக்கி விழுந்து காயமடைகின்றனர்.
கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது பெய்யும் மழையால், நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. இப்பிரச்னையை குடிநீர்வாரியம், மாநகராட்சி, தொகுதி எம்.பி., -- எம்.எல்.ஏ., முதல் வார்டு கவுன்சிலர் வரை யாரும் கண்டு கொள்வதில்லை என, பகுதிவாசிகள் ஆதங்கப்படுகின்றனர்.
எனவே, சாலைகளை நடப்பதற்காவது பயன்படுத்தும் வகையில், அவற்றை தற்காலிகமாக சீரமைக்க வேண்டும் என, தொடர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, அமைச்சர் உதயநிதி, 'தி.மு.க., வேட்பாளரை ஜெயிக்க வைத்தால், ஒவ்வொரு மாதமும் தொகுதிக்கு வந்து மக்கள் குறைகளை கேட்டு, நிவர்த்தி செய்வேன்' என உறுதி அளித்தார்.
தேர்தல் முடிந்த பின் அதுவும் பொய் வாக்குறுதியாக போனதாக பகுதிவாசிகள் புலம்பி வருகின்றனர்.
-- நமது நிருபர்-- -