ADDED : ஜூலை 15, 2024 01:20 AM
வண்ணாரப்பேட்டை:கொருக்குபேட்டை, காரனேசன் நகரைச் சேர்ந்தவர் அலெக்ஸ் பாபு, 22. சென்னை மாநகராட்சியில், ஒப்பந்த அடிப்படையில் நாய் பிடிக்கும் வேலை செய்து வந்தார்.
இவர், தன் உறவினர் மோகன்ராஜ், 37, என்பவருடன் சேர்ந்து, நேற்று மாலை 6:30 மணி அளவில், ஆர்.கே.நகர், தனியார் பள்ளி அருகே, ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தி உள்ளார்.
அப்போது, அதே தண்டவாளத்தில், சிறிது தொலைவில் மது அருந்திக்கொண்டிருந்த இரு நபர்களுக்கும், இவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், அலெக்ஸ் பாபு, மோகன்ராஜ் இருவரும் சேர்ந்து, அந்த நபர்களை தாக்கி உள்ளனர்.
அந்த நபர்கள் இருவரும் அங்கிருந்து சென்று, சிறிது நேரத்தில் மேலும் இரு நண்பர்களுடன் வந்து, அலெக்ஸ் பாபு மற்றும் மோகன்ராஜ் இருவரையும் ஆயுதங்களால் தாக்கி உள்ளனர். இதில் அலெக்ஸ் பாபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோகன்ராஜ், பலத்த காயங்களுடன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
வண்ணாரப்பேட்டை போலீசார், தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்.