/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடிகாலில் விழுந்த 2 மாடுகள் மீட்பு
/
வடிகாலில் விழுந்த 2 மாடுகள் மீட்பு
ADDED : ஜூலை 24, 2024 12:54 AM

சென்னை,
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட, ராஜகீழ்ப்பாக்கம், மாடம்பாக்கம் பிரதான சாலை, சிட்டி யூனியன் வங்கி எதிரில் மழைநீர் வடிகால் உள்ளது. இதன், 'மேன்ேஹால்' மூடப்படாமல் இருந்தது.
இது குறித்து பகுதிவாசிகள் புகார் தெரிவித்தும் மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனமாக செயல்பட்டனர். இந்த நிலையில், நேற்று பசு மாடு ஒன்று மழைநீர் வடிகால் மேன்ஹோலில் விழுந்தது.
தீயணைப்பு வீரர்கள் அரை மணிநேரம் போராடி மீட்டனர். பின், அப்பகுதியில் வீசப்பட்டிருந்த சிமென்ட் மூடியை, மாநகராட்சி ஊழியர்கள் எடுத்து வந்து பொருத்தி சென்றனர்.
எருமை மாடு மீட்பு
அதேபோல, தாம்பரம் - -வேளச்சேரி சாலையில் பள்ளிக்கரணை அரசு மேல்நிலைப் பள்ளி பகுதியில் உள்ள மழைநீர் வடிகாலில் எருமை மாடு சில தினங்களுக்கு முன் விழுந்துள்ளது.
அதேநேரம் கடந்த சில நாட்களாக எருமையை காணாததால் அதன் உரிமையாளர் தேடி வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று மழைநீர் வடிகாலில் இருப்பது கண்டறியப்பட்டது.
தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், தீவிர முயற்சி மேற்கொண்டும் மாட்டை வெளியே எடுக்க முடியவில்லை. இதையடுத்து, பொக்லைன் இயந்திரம் உதவியுடன் போராடி மீட்டனர்.
மழை நீர் வடிகால் 'மேன்ேஹால்' வழியாக மாடுகள் விழுந்த சம்பவம், சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும், மாநகராட்சியின் அலட்சியத்தையும் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது.
உயிர்களுக்கு அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.