/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின்சார ரயிலின் ஜன்னல்களில் நின்றபடி மாணவர்கள் சாகச பயணம்: பயணியர் அச்சம்
/
மின்சார ரயிலின் ஜன்னல்களில் நின்றபடி மாணவர்கள் சாகச பயணம்: பயணியர் அச்சம்
மின்சார ரயிலின் ஜன்னல்களில் நின்றபடி மாணவர்கள் சாகச பயணம்: பயணியர் அச்சம்
மின்சார ரயிலின் ஜன்னல்களில் நின்றபடி மாணவர்கள் சாகச பயணம்: பயணியர் அச்சம்
ADDED : ஜூலை 19, 2024 12:32 AM

சென்னை, சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படும் 450க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களில், எட்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.
காலை மற்றும் மாலையில் அலுவலக நேரங்களில் கூட்டம் அலைமோதுகிறது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் சிலர், மின்சார ரயில்களின் படியில் தொங்கியபடியும், ரயிலின் ஜன்னல் பகுதியில் நின்று கொண்டும் சாகச பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று காலை 8:15 மணிக்கு, திருவள்ளூர் - சென்னை சென்ட்ரல் மின்சார ரயிலில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவர்கள், திருவள்ளூர் ரயில் நிலையத்தில் ஏறினர்.
பின், அவர்கள் ரயிலின் ஜன்னல் பகுதிகளில் நின்று கொண்டு, படிகளில் ஏறியும், கூச்சலிட்டவாறும் பயணம் செய்தனர். 'பச்சையப்பா கல்லுாரி மாஸ்...' என சத்தம் போட்டுக் கொண்டு வந்தனர். இது, பயணியர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து ரயில் பயணியர் கூறியதாவது:
மின்சார ரயிலின் படி, ஜன்னலில் தொங்கியபடி, கூரையில் ஏறி சில மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்வது, பார்ப்பதற்கே பயமாக இருக்கிறது. ஒரே நேரத்தில் 30க்கும் மேற்பட்டோர் கூச்சலிட்டு கொண்டு பயணம் செய்வது, பயணியர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒழுக்கத்தை பின்பற்ற வேண்டிய மாணவர்கள், பயணியருக்கு இடையூறு செய்வது வேதனை அளிக்கிறது. பெரும்பாலான ரயில் நிலையங்களில் காவலர்களும் இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, ரயில்வே போலீசார் கூறுகையில், 'ரயில் பயணத்தின் போது சக பயணியருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ள கூடாது.
'தொடர்ந்து விதிமீறல்கள், வன்முறையில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும்' என்றனர்.