/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'வீரன்' சரக்கில் வீரியம் இல்லையாம்
/
'வீரன்' சரக்கில் வீரியம் இல்லையாம்
ADDED : ஜூலை 28, 2024 12:45 AM

சென்னை:'ஆல்கஹால்' அளவு குறைவாக இருப்பதால், நான்கு வகை மதுபானங்களை விற்க, கடை ஊழியர்களுக்கு 'டாஸ்மாக்' நிர்வாகம் தடை விதித்துள்ளது.
பீர் வகைக்கு ஆயுள் காலம் ஆறு மாதம். மது வகைகளுக்கு ஆயுள் காலம் கிடையாது. ஆனால், அவற்றில் ஆல்கஹால் அளவு 42.84 சதவீதம் இருக்க வேண்டும். அதை விட குறைவாகவோ, கூடுதலாகவோ இருந்தால் விற்கக்கூடாது.
இந்நிலையில், குறிப்பிட்ட நான்கு மது வகைகள் கடைகளில் இருப்பு இருந்தால், அவற்றை விற்காமல், கிடங்கிற்கு திருப்பி அனுப்புமாறு, மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, டாஸ்மாக் சென்னை வடக்கு மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் இருந்து, கடை ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள தகவல்:
ட்ரோபிகானா வி.எஸ்.ஓ.பி., பிராந்தி பேட்ச் எண் 013/ 2020, ஓல்டு சீக்ரெட் பிராந்தி பேட்ச் எண் 847/ 2018, வீரன் ஸ்பெஷல் பிராந்தி பேட்ச் எண் 082/ 2024 ஆகிய சரக்குகள் தங்கள் கடையில் இருந்தால், உடனே அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
மேற்கண்ட பேட்ச் எண், தேதி உள்ள சரக்குகளை கண்டிப்பாக விற்கக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மற்றொரு தகவலில், 'தலைமை அலுவலக உத்தரவின்படி, வீரன் ஸ்பெஷல் பிராந்தி - 180 மி.லி., பேட்ச் எண் 082 - 6.7.2024 விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
'எனவே, கடை பணியாளர்கள் மேற்கண்ட பிராந்திகளை விற்க வேண்டாம். கடையில் எவ்வளவு சரக்கு இருப்பு உள்ளது என்று கணக்கீடு செய்து, அலுவலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.