/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சர்வதேச புத்தக கண்காட்சியில் 752 ஒப்பந்தங்கள்
/
சர்வதேச புத்தக கண்காட்சியில் 752 ஒப்பந்தங்கள்
ADDED : ஜன 19, 2024 12:15 AM
சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், இரண்டாவது சர்வதேச புத்தகக்காட்சி 16ல் துவங்கி நேற்று நிறைவடைந்தது.
பல நாடுகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்றனர். மொத்தம் 752 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
நிறைவு விழாவில் பங்கேற்று, தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி பேசியதாவது:
புத்தாண்டு, பொங்கல் என, மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடும் இந்த நேரத்தில், சென்னை புத்தகக்காட்சி, சர்வதேச புத்தகக்காட்சி என, அறிவு சார்ந்த தளத்திலும் பயணிக்கும் ஒரே இனம் தமிழ் இனம் தான்.
உலகில், பதிப்புத் துறையில் இருக்கும் புதிய விஷயங்களை உள்வாங்கவும், தமிழ் படைப்புகளை மற்ற மொழிகளுக்கும், மற்ற மொழி படைப்புகளை தமிழுக்கும் மொழிபெயர்க்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
மொழிபெயர்ப்புக்காக, தமிழக அரசே ஊக்கத்தொகையையும் வழங்குகிறது.
இந்த நிகழ்வில், கடந்தாண்டைவிட இருமடங்கு நுால்கள், மொழிபெயர்க்க முடிவு செய்யப்பட்டு 752 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
சமீபத்தில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் எழுதிய, கொரோனா காலத்தின் சவாலான அனுபவங்களை குறித்த நுாலை வெளியிட்டேன்.
அது, செயற்கை நுண்ணறிவின் துணையுடன் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.
அதாவது, நாம் புதிய தொழில்நுட்பத்தை ஏற்கிறோம். அதேநேரம், மனிதனின் அறிவால் அதை சரிபார்க்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
இவ்வாறு அவர் பேசினார்.

