/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அகத்தீஸ்வரர் கோவில் குளம் சீரமைப்பு பணிகள் துவக்கம்
/
அகத்தீஸ்வரர் கோவில் குளம் சீரமைப்பு பணிகள் துவக்கம்
அகத்தீஸ்வரர் கோவில் குளம் சீரமைப்பு பணிகள் துவக்கம்
அகத்தீஸ்வரர் கோவில் குளம் சீரமைப்பு பணிகள் துவக்கம்
ADDED : பிப் 01, 2024 11:58 PM
வளசரவாக்கம் நீண்ட கால போராட்டத்திற்குப் பின், வளசரவாக்கம் அகத்தீஸ்வரர் கோவில் குளத்தை, 2.99 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கும் பணிக்காக, அடிக்கல் நாட்டப்பட்டது.
வளசரவாக்கம், ஆற்காடு சாலையில் அகத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை பராமரிப்பில் உள்ள இந்த கோவிலை ஒட்டி, 1.87 ஏக்கர் பரப்பில் திருக்குளம் அமைந்துள்ளது.
குளத்திற்கு போதிய வரத்து கால்வாய் இல்லாததால், வறண்டு காட்சியளித்தது. இது தொடர்பாக, நம் நாளிதழில் தொடர்ந்து செய்திகள் வெளியாகின.
இதன் எதிரொலியாக, குளத்தில் மழைநீர் தேங்கும் வகையில், மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது. மேலும், 87 லட்சம் ரூபாய் செலவில் குளத்தை துார் வாரி கரையமைத்து, நடைபாதை, மின் விளக்குகள் அமைக்கும் பணியை மாநகராட்சி மேற்கொண்டது.
ஒப்பந்தப்படி இப்பணிகள், 2021 செப்., 30ம் தேதியுடன் நிறைவு பெற்றிருக்க வேண்டும். பல்வேறு காரணங்களால், குளத்தை சீரமைக்கும் பணிகள் தடைபட்டன.
இந்நிலையில், கோவில் குளத்தில் மழைநீர் வடிகால் துார்வாரிய, கழிவுநீர் கலந்த மண்ணை நிரப்புவதாக, நம் நாளிதழில் கடந்த 2022 ஆண்டு ஜூன் 27ம் தேதி செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக, 28ம் தேதி ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கோவில் குளத்தை ஆய்வு செய்தார். பின், இந்த குளத்தை மாநகராட்சி மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறை மற்றும் மாநகராட்சி இணைந்து சீர் செய்யும் என, அமைச்சர் தெரிவித்தார்.
ஆனால், கோவில் குளத்தை அமைச்சர் ஆய்வு செய்த 1.5 ஆண்டு கடந்தும், கோவில் குளத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெறவில்லை. இதுகுறித்தும், தொடர்ந்து நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இந்நிலையில், இந்த குளத்தை 2.99 கோடி ரூபாய் செல்வில் சீர் செய்ய ஒப்பந்தம் கோரப்பட்டு, அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
இதல் அமைச்சர் சேகர்பாபு, மதுரவாயல் எம்.எல்.ஏ., கணபதி, மண்டல குழு தலைவர் ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின், அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வளசரவாக்கத்தில் 776 ஆண்டுகள் பழமை வாய்ந்த அகத்தீஸ்வரர் கோவில் குளத்தை சீரமைக்கும் பணி, 5 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்தது.
தற்போது, 2.99 கோடி ரூபாய் செலவில் குளத்தை சீர் செய்யும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
இன்று 13 கோவில்களில் குடமுழுக்கு நடந்தது. அகத்தீஸ்வரர் கோவிலிலும், 1.5 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இங்கு, 5 நிலை ராஜகோபுரம் அமைக்க முயற்சி செய்து வருகிறோம்.
இந்த ஆட்சியில் இதுவரை, 5,572 கோடி ரூபாய் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. கோவில்களில் 4 புதிய குளங்கள் 4.41 கோடி ரூபாய் செலவில் உருவாக்கும் பணி நடந்து வருகிறது.
அதேபோல், மூன்று ஆண்டுகளில் 122 திருக்குளங்களை, 78.44 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
ஹிந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் இல்லாத அளவிற்கு, 18,788 திருப்பணிகள், 4,157 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்திருப்பணிகளில் மூன்றில் ஒரு பங்கு பணிகளை, உபயதாரர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் அளிக்கின்ற நிதி முறையாக செலவிடப்படுகிறது என்பதால் அளிக்கின்றனர். தமிழகத்திற்கு நிதி தேவை அதிகமாக உள்ளது. கொரோனா புயல் சீற்றத்தால் தமிழகத்திற்கு அதிகமான நிதி கோரி இருந்தோம்.
'மிக்ஜாம்' புயலுக்கும் எந்தவிதமான நிதியும் மத்திய அரசிடமிருந்து கிடைக்கவில்லை. தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டிலாவது தமிழகத்திற்கு அதிகமாக நிதியும் ஒதுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

