/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அமோனியா கசிவு விவகாரம் எண்ணுாரில் கருத்துக்கேட்பு
/
அமோனியா கசிவு விவகாரம் எண்ணுாரில் கருத்துக்கேட்பு
ADDED : ஜன 28, 2024 12:11 AM
எண்ணுார், சென்னை எண்ணுாரில் இயங்கி வரும் கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் தொழிற்சாலையில், விவசாயத்துக்குத் தேவையான உரங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு அமோனியா திரவம் மூலப்பொருளாகத் தொழிற்சாலையின் வளாகத்தில் சேமிப்புத் தொட்டியில் சேகரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த டிச., 26ம் தேதி இந்தத் தொழிற்சாலையில் உள்ள குழாய்களில் ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவால், தொழிற்சாலையின் அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகளில் வசித்து வந்த மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டன.
வாயுக் கசிவு கண்டறியப்பட்ட பின், சம்பந்தப்பட்ட ஊழியர்களால் வாயுக் கசிவு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இப்பிரச்னையால் பாதிக்கப்பட்ட மக்கள், இதற்கு நிரந்தர தீர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில், 32வது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது. இதில், எண்ணுார் மக்கள் பாதுகாப்புக் குழு சார்பில், 'எண்ணுார் ஈர் நிலங்கள் சீரமைப்பு மக்கள் திட்டம்' வெளியீட்டு நிகழ்வு, நேற்று நடந்தது.
இதில், ஓய்வு பெற்ற நீதிபதிகள் முரளிதரன், கண்ணன், அரிபரந்தாமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துகளை கேட்டறிந்தனர்.
இதில், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் கூறியதாவது:
எங்களால் போராட்டத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. ஆனால், வலு சேர்க்கும். அரசின் கொள்கையே ஒப்பந்த அடிப்படையிலான வேலை தான். எனவே, அரசு வேலை என்பது இனி சாத்தியமில்லை. எண்ணுாரில் 33 கிராமங்கள் சுழற்சி முறையில் போராடி வருகின்றனர்.
மின் உற்பத்திக்கு அரசு மாற்று வழியை பயன்படுத்தலாம். 8 அடிக்கு சாம்பல் கழிவு படர்ந்து, கொசஸ்தலை ஆற்றையே காணவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.