/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாணவர் பலி விவகாரம் பேருந்து நடத்துனர் கைது
/
மாணவர் பலி விவகாரம் பேருந்து நடத்துனர் கைது
ADDED : ஜன 16, 2024 11:12 PM
சென்னை, தண்டையார்பேட்டை பணிமனையில் இருந்து மணலிக்கு, தடம் எண்: 44 மாநகர பேருந்து இயக்கப்படுகிறது.
கடந்த 13ம் தேதி, பேருந்தில் கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த அரசுகுமார் ஓட்டுனராக பணியில் இருந்தார். கொளத்துார், சாரதி நகரைச் சேர்ந்த அன்பழகன், 53, நடத்துனராக இருந்தார்.
பேருந்து, பவர் ஹவுஸ் பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது, கொருக்குப்பேட்டை, கருமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மாநகராட்சி பள்ளி 10ம் வகுப்பு மாணவன், விஷால் பேருந்தில் ஏறினார்.
படிக்கட்டில் பயணித்த அவர் திடீரென கீழே விழுந்து படுகாயமடைந்தார். ஸ்டான்லி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இது குறித்து, வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரித்தனர்.
உயிரிழப்பதற்கு முன், கடைசி வாக்குமூலத்தில் நடத்துனர் தள்ளிவிட்டதால் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து, ஆர்.கே.நகர் போலீசில் விஷாலின் தந்தை சந்திரன், 43, புகார் அளித்தார்.
விசாரணையில், பவர் ஹவுஸ் பேருந்து நிறுத்தத்தில் இருந்து, விஷால் மற்றும் அவரது நண்பர் சாமுவேல் ஆகியோர், பேருந்தின் முன் பகுதியில் ஏறியுள்ளனர்.
அப்போது ஆவேசமாக வந்த நடத்துனர், சாமுவேல் மற்றும் விஷாலை வலுக்கட்டாயமாக இறங்க செய்துள்ளார். இதில் தடுமாறி கீழே விழுந்த விஷாலின் இடதுபுற பின்பக்க டயர் வயிற்றில் ஏறி இறங்கியது.
அப்போது அங்கிருந்த பொதுமக்களில் ஒருவர், விஷாலிடம் என்ன நடந்தது என கேட்டதில், 'நடத்துனர் கையை தள்ளிவிட்டதில் கீழே விழுந்து விட்டதாக' தெரிவித்தார்.
இந்த ஆடியோ ரெக்கார்டு பதிவை, மொபைல் போனில் பதிந்து, அந்த நபர் போலீசில் ஒப்படைத்தார்.
இதையடுத்து, சம்பவத்தில் ஈடுபட்ட ஓட்டுனர், நடத்துனர் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர்.
சம்பவத்தில் ஈடுபட்ட நடத்துனர் அன்பழகனை, கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தலைமறைவான ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

