ADDED : ஜூன் 14, 2026 03:37 AM

வழிகாட்டி நிகழ்ச்சியில் கல்வி ஆலோசகர் ஜெய பிரகாஷ் காந்தி பேசியதாவது:
நாம் எந்த கல்லுாரியில் படிக்கிறோம் என்பது முக்கியம். அதுவும், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் ஏ.ஐ., படிப்போருக்கு, நல்ல கோச்சிங் மிக முக்கியம். எந்த துறையில் வளர்ச்சி மற்றும் தேவை உள்ளதோ, அந்த துறையை தேர்வு செய்து படிப்போருக்கே, பிரகாசமான வாய்ப்புகள் கிடைக்கும்.
ஏ.ஐ., 'டூல்ஸ்' குறித்து யாரும் சரியாக புரிந்துக் கொள்ளவில்லை. ஏ.ஐ., ஏஜன்ட் உருவாக்க கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு, 'கோடிங்' தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதைப்பற்றிய யு டியூப்பில் பார்க்கலாம். அதைக்கூட கற்காமல், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிப்பதில், எந்த பயனும் இல்லை.
இன்று உள்ள மாணவர்கள், ஆட்டம், பாட்டம் என, ஜாலியாக இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். கல்லுாரியில் அளிக்கும் கோச்சிங் எப்படி; இதுவரை எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது; மற்ற கல்லுாரிகளை விட, மேம்பட்ட பயிற்சிகள் வழங்கப்படுகின்றனவா; அதிகப்படியான நிறுவனங்களுடன் நட்பு உள்ளதா என்பதை எல்லாம் விசாரித்து, அவற்றை பட்டியலிட்டு, வேண்டிய கல்லுாரியை தேர்வு செய்ய வேண்டும்.
அதேபோல், எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் சார்ந்த பல புது படிப்புகள் வந்து விட்டன. இவை குறித்து தெரிந்துக் கொள்ள வேண்டும். இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்த்துக் கொண்டு இருப்பதால் பயனில்லை; செய்தித்தாள் படிக்க வேண்டும்.
கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டுக்கு, 'கட் ஆப்' மதிப்பெண் நிச்சயம் குறையும். வெறும் கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிகல், இ.சி.இ., படிப்பதால் மட்டும், பின்னாளில் வேலை கிடைத்து விடாது.
எனவே, அதைச் சார்ந்து உள்ள புது படிப்புகளை தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப, உங்களுடைய துறையை தேர்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
