/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிரிந்து சென்ற மனைவியை வாழ அழைத்த கணவனுக்கு வெட்டு
/
பிரிந்து சென்ற மனைவியை வாழ அழைத்த கணவனுக்கு வெட்டு
பிரிந்து சென்ற மனைவியை வாழ அழைத்த கணவனுக்கு வெட்டு
பிரிந்து சென்ற மனைவியை வாழ அழைத்த கணவனுக்கு வெட்டு
ADDED : ஜூன் 20, 2025 12:35 AM
பல்லாவரம்,
குரோம்பேட்டை, லட்சுமி நகர் விரிவை சேர்ந்தவர் சதீஷ், 34. தாம்பரம் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். அவருக்கு திருமணமாகி சந்தியா, 30, என்ற மனைவி உள்ளார்.
சமீபகாலமாக, சதீஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. தினமும் மது அருந்திவிட்டு வந்து, மனைவியை அடித்து உதைப்பதை வழக்கமாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதனால், சந்தியா கோபித்துக்கொண்டு, பல்லாவரம் தர்கா சாலையில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம், மனைவியை சமாதானம் செய்து அழைத்து வர, மாமனார் வீட்டிற்கு சதீஷ் சென்றார்.
அப்போது, அவரை கண்டதும் ஆத்திரமடைந்த சதீஷின் மாமனார் ரவி, 54, மைத்துனர் தனசேகர், 19, மற்றும் உறவினர் ஒருவர் சேர்ந்து, வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து, சதீஷின் தலையில் சரமாரியாக வெட்டியதாக தெரிகிறது.
இதில் படுகாயமடைந்த அவர், அங்கேயே மயங்கி விழுந்தார். போலீசார் விரைந்து, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சதீஷை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக, பல்லாவரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.