ADDED : செப் 28, 2025 02:47 AM
போதை வஸ்து விற்பனை பட்டதாரி கைது
மாம்பலம்: மாம்பலம் போலீசார் மற்றும் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாரின் கண்காணிப்பின்போது, நேற்று முன்தினம், போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட, தி.நகர், அப்துல் அஜிஸ் தெருவைச் சேர்ந்த பி.பி.ஏ., பட்டதாரி வெங்கடேசன், 30 என்பவர் சிக்கினார்.
அவரிடம் இருந்து, 2 கிராம் மெத் ஆம்பெட்டமைன் மற்றும் எட்டு எல்.எஸ்.டி., ஸ்டாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. வெங்கடேசன் பழைய கார் மற்றும் இருசக்கர வாகனம் விற்பனை செய்யும் தொழில் செய்து வருவதும் தெரியவந்தது.
கடையில் மாமூல் கேட்டு மிரட்டியோர் கைது
வியாசர்பாடி: வியாசர்பாடி, தேசிகானந்தபுரத்தில் மளிகை கடை நடத்தி வருபவர் ராஜேந்திரன், 41; மளிகைக் கடைக்காரர்.
நேற்று மளிகை கடைக்கு வந்த மர்ம நபர்கள் இருவர், பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு, கடையில் இருந்த பொருள்களை அடித்து நொறுக்கினர். மேலும், இரும்பு ராடால் ராஜேந்திரனை பயங்கரமாக தாக்கி தப்பினர். இதில் படுகாயமடைந்த ராஜேந்திரனை, அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.
இது தொடர்பாக, வியாசர்பாடி, சத்யா நகரசை் சேர்ந்த நாகராஜ், 30, பி.வி.காலனியைச் சேர்ந்த முருகன், 27 ஆகிய இருவரை கைது செய்தனர்.
பழைய இரும்பு குடோனில் தீ விபத்து
ஆர்.கே.நகர்: ஆர்.கே.நகர், பெருமாள் செட்டி தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 65. இவர், கொருக்குப்பேட்டை, வேலன் நகரில், பழைய இரும்பு குடோன் நடத்தி வருகிறார்.
நேற்று மாலை 4:00 மணியளவில், குடோன் தீப்பிடித்து எரிந்தது. வண்ணாரப்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் 10க்கும் மேற்பட்டோர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். காஸ் சிலிண்டர் பாதுகாப்பாக அகற்றப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து, ஆர்.கே.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
பேருந்து கண்ணாடி உடைத்தவர் கைது
முத்தியால்பேட்டை: மாநகர பேருந்து ஓட்டுநராக பணிபுரிபவர் சரவணபாலன், 35. இவர், திருவொற்றியூர், டோல்கேட் முதல் விவேகானந்தர் இல்லம் வரை செல்லும் தடம் எண் '32ஏ' மாநகர பேருந்தை நேற்று ஓட்டினார்.
பிராட்வே, பிரகாசம் சாலை அருகே பேருந்து சென்றபோது, பயணி ஒருவர் பேருந்தின் இடதுபக்கம் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினார்.
இது குறித்து விசாரித்த முத்தியால்பேட்டை போலீசார், கண்ணாடியை உடைத்த பிராட்வேயைச் சேர்ந்த ஆனந்தன், 27, என்பவரை, நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

