/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நீர்நிலைகளில் கழிவுநீர் கொட்டி அட்டகாசம் லாரி உரிமையாளர்களை பிடிக்க உத்தரவு
/
நீர்நிலைகளில் கழிவுநீர் கொட்டி அட்டகாசம் லாரி உரிமையாளர்களை பிடிக்க உத்தரவு
நீர்நிலைகளில் கழிவுநீர் கொட்டி அட்டகாசம் லாரி உரிமையாளர்களை பிடிக்க உத்தரவு
நீர்நிலைகளில் கழிவுநீர் கொட்டி அட்டகாசம் லாரி உரிமையாளர்களை பிடிக்க உத்தரவு
ADDED : ஜன 27, 2024 12:28 AM

குடியரசு தின விழாவை முன்னிட்டு, புறநகர் பகுதிகளில் நேற்று, கிராம சபைக் கூட்டம் நடந்தது.
முடிச்சூர் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில், அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர். சி.எம்.டி.ஏ., மற்றும் ஒன்றிய பொது நிதி, 2.36 கோடி ரூபாயில் சாலை அமைக்கப்பட உள்ளதை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அப்போது, 'அணுகு சாலையில் ஆம்னி பேருந்து நிலையம் கட்டும் இடத்தில், விவசாய நிலத்திற்கு செல்ல வழி ஏற்படுத்தி தர வேண்டும் என, கடந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என, மக்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அதிகாரிகள், பதில் கூறாமல் மழுப்பினர். தவிர, 2008ல் முடிச்சூர் பகுதியில், இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இதில், மேய்க்கால் புறம்போக்கு இடத்திற்கு வழங்கப்பட்ட பட்டாக்களை, அடங்கலில் ஏற்றாதது குறித்து, பொதுமக்கள் கேட்ட கேள்வியை, வருவாய் துறையினர் கண்டுகொள்ளவில்லை.
பரங்கிமலை ஒன்றியம், பெரும்பாக்கம் ஊராட்சியில், காலை 10:00 மணிக்கு துவங்கிய கூட்டத்திற்கு, ஊராட்சி தலைவர் சுஹாசினி தலைமை வகித்தார். இதில், 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அதில், 20க்கும் அதிகமானோர் மாற்றுத்திறனாளிகள்.
ஊராட்சியில் விரைந்து முடிக்கப்பட வேண்டிய 11 பணிகளை அவர்கள் பட்டியலிட்டு, தலைவரிடம் வழங்கினர்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஒன்றியம் கெருகம்பாக்கம் ஊராட்சியில் நடந்த கிராம சபையில் சிறு, குறு தொழில்துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்றார்.
அப்போது, கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள், கழிவுநீர் டேங்கர் லாரிகள், கெருகம்பாக்கம் பகுதியில் உள்ள கால்வாய், பொது இடங்களில் கொட்டி அட்டகாசம் செய்வதால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக தெரிவித்தனர்.
இதை கேட்ட அமைச்சர் அன்பரசன், மாங்காடு காவல் நிலைய ஆய்வாளரிடம் விளக்கம் கேட்டு, ''நீர்நிலையில் கழிவுநீர் கொட்டும் லாரியின் உரிமையாளரை கைது செய்யுங்கள்.
''அலட்சியம் காட்டினால் உங்கள் மீது மேலிடத்தில் புகார் அளிப்பேன்,'' என்றார்.
- நமது நிருபர் குழு -

