/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
5,000 மனைகளுக்கு கட்டுமான அனுமதி கிடைக்காமல் மக்கள்... பரிதவிப்பு பயன்படுத்தாத நிலங்களை 30 ஆண்டாக விடுவிக்காத வாரியம்
/
5,000 மனைகளுக்கு கட்டுமான அனுமதி கிடைக்காமல் மக்கள்... பரிதவிப்பு பயன்படுத்தாத நிலங்களை 30 ஆண்டாக விடுவிக்காத வாரியம்
5,000 மனைகளுக்கு கட்டுமான அனுமதி கிடைக்காமல் மக்கள்... பரிதவிப்பு பயன்படுத்தாத நிலங்களை 30 ஆண்டாக விடுவிக்காத வாரியம்
5,000 மனைகளுக்கு கட்டுமான அனுமதி கிடைக்காமல் மக்கள்... பரிதவிப்பு பயன்படுத்தாத நிலங்களை 30 ஆண்டாக விடுவிக்காத வாரியம்
ADDED : ஜூன் 06, 2025 11:48 PM

சென்னை :சென்னை வளசரவாக்கம், போரூர், ராமாபுரம், மதுரவாயல், நெற்குன்றம், ஆலம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், 5,000த்திற்கும் மேற்பட்ட மனைகளுக்கு கட்டுமான திட்ட அனுமதி பெற முடியாமல், மனை உரிமையாளர்கள் பரிதவித்து வருகின்றனர். குடியிருப்பு திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தப்படுவதாக அறிவித்து பயன்படுத்தாத நிலங்களை, வீட்டு வசதி வாரியம், 30 ஆண்டுகளாக விடுவிக்காமல் உள்ளதே இந்த பரிதவிப்புக்கு காரணம்.
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், வீட்டுவசதி வாரியம், எதிர்கால தேவைக்கு கையகப்படுத்த நிலங்களை தேர்வு செய்தது. தேர்வு செய்யப்பட்ட நில உரிமையாளர்களுக்கு, 30 ஆண்டுகளுக்கு முன் முதற்கட்ட நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதில், பெரும்பாலான நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை வாரியம் கைவிட்டது. எனினும், இந்த நிலங்களை தேர்வு செய்த அறிவிப்பை, வாரியம் திரும்பப் பெறாமல் உள்ளது.
இதனால், இந்த நிலங்களில் வீடு கட்ட அதன் உரிமையாளர்கள் திட்டமிட்டால், அதற்கு வீட்டுவசதி வாரிய தடையின்மை சான்றிதழ் பெற வேண்டியது அவசியமானது. இந்த தடையின்மை சான்றிதழ் இருந்தால் மட்டுமே கட்டுமான திட்ட அனுமதி பெற முடியும்.
இந்நிலையில், கட்டுமான நிறுவனங்கள், தனித்தனியாக விண்ணப்பித்து தடையின்மை சான்றிதழ் பெற்று வந்தன. தற்போது, இது தொடர்பான நடவடிக்கைகளை வாரியம் நிறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
தடையின்மை சான்று கேட்டு, மனைகளின் உரிமையாளர்கள், வீட்டு வசதி வாரிய அலுவலத்திற்கு அலைந்து திரிந்ததுதான் மிச்சம். தடையின்மை சான்று கிடைக்காததால் வீடு கட்ட முடியாமலும், வீட்டு மனைகளை விற்க முடியாமலும் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, இந்திய கட்டுமான வல்லுனர் சங்கத்தின் தென்னக மைய நிர்வாகி எஸ்.ராமபிரபு கூறியதாவது:
சென்னையின் மேற்கு பகுதியில், வளசரவாக்கம், நெற்குன்றம், போரூர், மதுரவாயல், ஆலப்பாக்கம், ராமாபுரம் ஆகிய இடங்களில், ரியல் எஸ்டேட் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. இங்கு மனை வைத்துள்ளவர்கள், அதில் வீடு கட்ட முயற்சிக்கின்றனர்.
இவ்வாறு, கட்டட அனுமதி பெறும்போது, வீட்டுவசதி வாரிய திட்டத்துக்காக கையகப்படுத்த இருந்த நிலம் என, பல்வேறு பகுதிகள் வருகின்றன. இங்குள்ள, 5,000த்திற்கும் மேற்பட்ட மனைகளுக்கு வீட்டுவசதி வாரியத்தின் தடையின்மை சான்றிதழ் பெற வேண்டியது அவசியம்.
தற்போது, சில மாதங்களாக தடையின்மை சான்றிதழ் வழங்கப்படுவது இல்லை. இந்த நிலங்களை மொத்தமாக விடுவிக்க, வீட்டுவசதி வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பிரச்னையை தீர்த்தால் மட்டுமே இங்கு மக்கள் வீடு கட்டுவது, புதிய வீடு வாங்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விடுவிப்பது எப்போது?
இதுதொடர்பாக, வீட்டுவசதி வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகம் முழுதும், வீட்டுவசதி வாரியத்தால் கையகப்படுத்த உத்தேசிக்கப்பட்டு, பயன்படுத்தப்படாமல், 10,000 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களை விடுவிக்க கொள்கை முடிவு எடுக்கப்பட்டது.
இதில், கையகப்படுத்த முதல்கட்ட நோட்டீஸ் மட்டும் அளிக்கப்பட்ட, 5,910 ஏக்கர் நிலங்களை ஒட்டுமொத்தமாக ஒரே அரசாணையில் விடுவிக்க முடிவு செய்தோம். ஆனால், பகுதி வாரியாக ஆய்வு செய்து, கிராம அளவில் சர்வே எண்களை குறிப்பிட வேண்டியுள்ளது.
இதற்காக, குறிப்பிட்ட தொகுதிகளாக பிரித்து அரசாணை வெளியிடப்படுகிறது. இந்த வகையில், 3,710 ஏக்கர் நிலங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.
இதில் இரண்டாம் கட்டமாக, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், 1,208 ஏக்கர் நிலங்கள் விடுவிக்கப்பட்டன. அடுத்தகட்டமாக, சென்னை மற்றும் புறநகர் உள்ளிட்ட பகுதிகளில், 992 ஏக்கர் நிலங்கள் விரைவில் விடுவிக்கப்பட உள்ளன.
அப்போது, வளசரவாக்கம், போரூர் உள்ளிட்ட பகுதி மக்களின் பிரச்னைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.