/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தொடரும் மின் வெட்டு மக்கள் சாலை மறியல்
/
தொடரும் மின் வெட்டு மக்கள் சாலை மறியல்
ADDED : ஜூன் 15, 2025 12:30 AM
எம்.கே.பி.நகர், எம்.கே.பி.நகர், காரிமேடு, பி.வி.காலனி உள்ளிட்ட பகுதிகளில், ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. சில மாதங்களாக இப்பகுதியில், தொடர்ந்து மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து, மின் வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு மின் வெட்டு ஏற்பட்டது. இதனால் முதியோர், குழந்தைகள் பெரிதும் அவதியடைந்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர், எம்.பி.எம்., தெரு தீயணைப்பு நிலையம் அருகில், நேற்று அதிகாலை 12:00 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். எம்.கே.பி.நகர் போலீசார், மின் வாரிய அதிகாரிகள் வந்து, மின் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என சமரசம் பேசியதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர். அதிகாலை 2:00 மணிக்கு மின்சாரம் மீண்டும் வந்தது.
அதேபோல், குன்றத்துார் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் 80,000த்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு சில நாட்களாக, அடிக்கடி மின் வெட்டு ஏற்படுவதால் அப்பகுதிவாசிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
இது குறித்து, பொதுமக்கள் கூறுகையில், 'குன்றத்துார் மலை அடிவாரம், நந்தம், பாலவராயர் குளக்கரை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில், நேற்று முன்தினம் இரவு 10:30 மணி முதல் 1:30 மணி வரை மின் தடை செய்யப்பட்டதால், துாக்கமின்றி அவதிக்குள்ளானோம். குன்றத்துாரில் சமீப காலமாக அடிக்கடி மின் வெட்டு ஏற்படுகிறது. குன்றத்துார் மின்வாரிய அலுவலகத்தினர் தடையின்றி மின்சாரம் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.