/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மழைக்கு முன்பே நிரம்பும் புழல் ஏரி முன்னெச்சரிக்கை பணிகள் சுணக்கம்
/
மழைக்கு முன்பே நிரம்பும் புழல் ஏரி முன்னெச்சரிக்கை பணிகள் சுணக்கம்
மழைக்கு முன்பே நிரம்பும் புழல் ஏரி முன்னெச்சரிக்கை பணிகள் சுணக்கம்
மழைக்கு முன்பே நிரம்பும் புழல் ஏரி முன்னெச்சரிக்கை பணிகள் சுணக்கம்
ADDED : செப் 19, 2025 12:19 AM

சென்னை, வடகிழக்கு பருவமழை துவங்கும் முன்பே, புழல் ஏரி நிரம்பும் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை பணிகளில் நீர்வளத்துறையினர் சுணக்கமாக உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல் ஏரி வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இது, 3.30 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது.
இந்த ஏரியில் தேங்கும் நீரை வைத்து, சென்னையின் நான்கு மாத குடிநீர் தேவையை எளிதாக பூர்த்தி செய்ய முடியும். வடகிழக்கு பருவமழையில் கிடைக்கும் நீர் மட்டுமின்றி, பூண்டி, சோழவரம் ஏரிகளில் தேங்கும் நீரும், புழல் ஏரிக்கு கால்வாய் வாயிலாக எடுத்து வரப்படுகிறது.
தற்போது, புழல் ஏரியில், 2.99 டி.எம்.சி., அளவிற்கு நீர் இருப்பு உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில், அடுத்து ஒருநாள் கனமழை பெய்யும்பட்சத்தில், ஏரி நிரம்புவதற்கு வாய்ப்புள்ளது.
ஏரி அபாய கட்டத்தை எட்டினால், அதில் இருந்து உபரிநீரை வெளியேற்ற வேண்டும். செங்குன்றம் மதகில் துவங்கும் உபரிநீர் கால்வாய், 11 கி.மீ., பயணித்து, சடையங்குப்பம் அருகே வங்க கடலில் கலக்கிறது.
இந்த கால்வாயில், சாமியார் மடம், வடகரை பாபா நகர், திருநீலகண்டன் நகர், கொசப்பூர் உள்ளிட்ட பல இடங்களில், ஆகாயத்தாமரை கொடிகள் படர்ந்து கிடக்கின்றன.
இவற்றை அகற்றாமல், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில், நீர்வளத்துறையினர் சுணக்கமாக உள்ளனர். இதனால், திடீரென ஏரி நிரம்பும்போது அதிகளவில் நீரை வெளியேற்றினால், கரைகளில் உடைப்பு ஏற்பட்டு, வெள்ளம் ஊருக்குள் புகுந்து விடும் அபாயம் உள்ளது.
கடந்த காலங்களில் பாடம் கற்றும், நீர்வளத்துறையினர் விழித்துக்கொள்ளாதது, அப்பகுதி மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.