/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குடியரசு தின விழா சென்னையில் கோலாகலம்
/
குடியரசு தின விழா சென்னையில் கோலாகலம்
ADDED : ஜன 27, 2024 12:42 AM

சென்னை, புறநகர் பகுதிகளில், 75வது குடியரசு தின விழா நேற்று, வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில், மேயர் பிரியா தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். மூவர்ண பலுான்களை விண்ணில் பறக்கவிட்டப்பின், தேசிய மாணவர் படை சாரண - சாரணியரின் அணிவிப்பு மரியாதையை ஏற்றார்.
மேலும், மாநகராட்சி பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளையும் பார்வையிட்டார். தொடர்ந்து, மாநகராட்சிக்கு முறையாக சொத்துவரி செலுத்தியோருக்கு, பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
அதேபோல், மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய 137 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை பாராட்டி, சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கினார்.
சென்னை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவில், கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தேசியக்கொடியை ஏற்றி, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பின், சென்னையில் வசிக்கும் 13 சுதந்திர போராட்ட தியாகிகளை வரவழைத்து கவுரவித்தார்.
இவ்விழாவில், தாட்கோ, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளி நலத்துறை உள்ளிட்ட பல்துறைகளில், 36 பயனாளிகளுக்கு உதவித்தொகை, தையல் இயந்திரம், இருசக்கர வாகனங்களுக்கான மானியம் என, 14.91 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
பல துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 298 பணியாளர்களுக்கு, பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில், வேட்டி சட்டை அணிந்து வந்த தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, தேசியக் கொடியை ஏற்றி, மரியாதை செலுத்தினார். மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பாதுகாப்பு படை வீரர்கள், பல்வேறு சாகசங்களை நடத்திக் காட்டினர்.
சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்தில், மின் வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, தேசியக்கொடியை ஏற்றினார்
தமிழ்நாடு மாநில தேர்தல் கமிஷனர் அலுவலகத்தில், மாநில தேர்தல் கமிஷனர் பழனிகுமார் தேசியக் கொடியேற்றி, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்
சென்னை பாதுகாப்புத்துறை கணக்கு கட்டுப்பாட்டு அலுவலர் அலுவலகத்தில், கட்டுப்பாட்டு அலுவலர் ஜெயசீலன் தேசியக் கொடியேற்றினார். விழாவில், 100 முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் கவுரவிக்கப்பட்டனர்
கிண்டி - வேளச்சேரி சாலையில் உள்ள வனத்துறை அலுவலகத்தில், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சுப்ரத் மொஹபத்ர தேசியக்கொடி ஏற்றினார்
சென்னை துறைமுக விளையாட்டு அரங்கில், சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால் தேசியக்கொடி ஏற்றினார்
சென்னை விமான நிலையத்தில், அதன் இயக்குனர் தீபக், தேசியக்கொடி ஏற்றினார். மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் வீர சாகச நிகழ்ச்சிகள் நடந்தன
நந்தனத்தில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில், அதன் நிர்வாக இயக்குனர் சித்திக் தேசியக்கொடியை ஏற்றி, சிறப்பாக பணியாற்றி வரும் 145 பேருக்கு பரிசுகளை வழங்கினார்
பல்லவன் சாலையில் உள்ள மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் தலைமையகத்தில் அதன் நிர்வாக இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ், தேசியக்கொடியை ஏற்றி, 204 பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கினார்
ஆவடி காவல் ஆணையரகத்தில் கமிஷனர் சங்கர் தேசியக்கொடி ஏற்றி, வண்ண பலுான்கள் மற்றும் புறாக்களை பறக்கவிட்டார். இந்த விழாவில், 97 அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு, முதல்வரின் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அங்கு நடந்த ஆயுதப்படை போலீசாரின் சாகசம், மோப்ப நாய்களின் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள், பார்வையாளர்களை கவர்ந்தன.
இதேபோல், அனைத்து அரசு அலுவலகங்கள், மண்டல குழு தலைவர்கள் அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லுாரிகளில் தேசியக்கொடி ஏற்றி, குடியரசு தின விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. மாணவ - மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.
- நமது நிருபர்கள் குழு -

