/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புழல் ஏரி கால்வாயில் 5 ஆண்டாக திறக்காத பாலம் வண்ணம் பூசி அழகு பார்க்கும் மாநகராட்சி
/
புழல் ஏரி கால்வாயில் 5 ஆண்டாக திறக்காத பாலம் வண்ணம் பூசி அழகு பார்க்கும் மாநகராட்சி
புழல் ஏரி கால்வாயில் 5 ஆண்டாக திறக்காத பாலம் வண்ணம் பூசி அழகு பார்க்கும் மாநகராட்சி
புழல் ஏரி கால்வாயில் 5 ஆண்டாக திறக்காத பாலம் வண்ணம் பூசி அழகு பார்க்கும் மாநகராட்சி
ADDED : ஜூலை 02, 2025 12:31 AM

சென்னை ஐந்து ஆண்டுகளாக திறக்கப்படாத பாலத்தை பெயிண்ட் அடித்து சென்னை மாநகராட்சி அழகு பார்த்துள்ளது, பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரி, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது. இந்த ஏரி நிரம்பும்போது, அதில் இருந்து உபரிநீரை வெளியேற்ற, செங்குன்றத்தில் இரண்டு ஷட்டர்கள் உள்ளன.
இந்த ஷட்டர்களுக்கு கீழே துவங்கும் புழல் ஏரி உபரிநீர் கால்வாய், 11 கி.மீ., பயணித்து சடையங்குப்பம் பர்மா நகர் அருகே வங்க கடலில் கலக்கிறது. இந்த உபரிநீர் கால்வாயின் இரண்டு புறங்களிலும் முன்பு விவசாயம் நடந்தது.
தற்போது தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், குறு, சிறு தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவை பெருகியுள்ளன. இதனால், புழல் ஏரி உபரிநீர் கால்வாயை கடந்து செல்ல வேண்டியுள்ளது.
வடப்பெரும்பாக்கம், கொசப்பூர் ஆகிய இடங்களில், மாநில நெடுஞ்சாலைத்துறை வாயிலாக உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு உள்ளது. வடப்பெரும்பாக்கத்தில் புழல் ஏரியின் குறுக்கே, யூனியன் சாலை செல்கிறது.
புழல் மத்திய சிறைச்சாலைக்கு எதிரே துவங்கும் இந்த சாலை, வடப்பெரும்பாக்கத்தில் ஜி.என்.டி., சாலையில் இணைகிறது. வடப்பெரும்பாக்கத்தில் இருந்து புழல் வழியாக சென்னை புறவழிச்சாலைக்கு செல்வதற்கான இணைப்பு சாலையாகவும் இது உள்ளது.
இந்த சாலையில் புழல் ஏரி உபரிநீர் கால்வாயின் குறுக்கே, உயர்மட்டப்பாலம் அமைக்கும் பணிகள் அ.தி.மு.க., ஆட்சியில் துவங்கப்பட்டது.
இதற்கு நகராட்சி நிர்வாகத்துறை வாயிலாக, சென்னை மாநகராட்சிக்கு, 14 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டு தி.மு.க., அரசு பொறுப்பேற்கும் முன், 90 சதவீத பணிகள் முடிந்தன. பாலத்திற்கு இரு பக்கமும் இணைக்கும் பணிக்கு நிலம் கையகப்படுத்த வேண்டியிருந்தது.
ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் நில உரிமையாளர்கள் நீதிமன்றத்தை அணுகி பால பணிகளுக்கு தடை பெற்றுவிட்டனர். இதனால், பணி கிடப்பில் போடப்பட்டது. ஐந்து ஆண்டுகளாக பாலம் திறக்கப்படாமல் அப்படியே கிடக்கிறது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி பாலங்கள் பிரிவு வாயிலாக, ஐந்து ஆண்டுகளாக திறக்கப்படாத மேம்பாலத்திற்கு பழுப்பு நிறத்தில் பெயின்ட் அடித்து அழகு பார்க்கப்பட்டு உள்ளது.
வடப்பெரும்பாக்கத்தை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:
புழல் ஏரி உபரிநீர் கால்வாயின் இரு புறமும், வடபெரும்பாக்கம் மற்றும் புழல் பகுதியில் உள்ள மாநகராட்சி வார்டுகள், அ.தி.மு.க., கவுன்சிலர்களிடம் உள்ளது.
'தி.மு.க.,விற்கு ஓட்டுப்போடாத மக்கள் வருந்தும் வகையில் ஆட்சி செயல்படும்' என, ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். ஆனால், ஓட்டு போடாத மக்களை வஞ்சிப்பது போல, சென்னை மாநகராட்சி நிர்வாகம் நடந்து கொண்டுள்ளது.
கட்டி முடிக்காத பாலத்திற்கு வண்ணம் பூசி, பொதுமக்களை கோபம் அடைய செய்துள்ளனர். நான்கரை ஆண்டுகளாக திறக்கப்படாத பாலத்தை ஆட்சி முடிவதற்குள் திறக்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பாலம் கட்டப்படாதால், 3 கி.மீ., சுற்றி மாதவரம் தாசில்தார் அலுவலகத்திற்கு செல்ல வேண்டியுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.