/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெருங்குடி குப்பை கிடங்கில் பூங்காவுக்கு எதிர்ப்பு மீண்டும் சதுப்பு நிலமாக பராமரிக்க வலியுறுத்தல்
/
பெருங்குடி குப்பை கிடங்கில் பூங்காவுக்கு எதிர்ப்பு மீண்டும் சதுப்பு நிலமாக பராமரிக்க வலியுறுத்தல்
பெருங்குடி குப்பை கிடங்கில் பூங்காவுக்கு எதிர்ப்பு மீண்டும் சதுப்பு நிலமாக பராமரிக்க வலியுறுத்தல்
பெருங்குடி குப்பை கிடங்கில் பூங்காவுக்கு எதிர்ப்பு மீண்டும் சதுப்பு நிலமாக பராமரிக்க வலியுறுத்தல்
ADDED : பிப் 06, 2024 12:59 AM

பெருங்குடி, சென்னை மாநகராட்சி, 184வது வார்டுக்கு உட்பட்டது பெருங்குடி. இங்கு, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை கையகப்படுத்தி, அதில் 228 ஏக்கர் பரப்பில், மாநகராட்சியின் குப்பைக் கிடங்கு செயல்பட்டு வந்தது.
பெருங்குடி குப்பை கிடங்கை 'பயோமைனிங்' என்ற முறையில் மீட்டுருவாக்கம் செய்யும் வகையில், 'பல்லுயிர் பெருக்க சுற்றுச்சூழல் பூங்கா' திட்டத்தை நிறைவேற்ற, சென்னை மாநகராட்சி திட்டமிட்டது.
தற்போதுள்ள 228 ஏக்கர் குப்பை கிடங்கில், 93 ஏக்கர் பரப்பில் 99 கோடி ரூபாய் செலவில் பல்லுயிர் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டது.
அதில், பலவகை தாவரங்கள் நடப்பட்டு, நீர் வழித்தடமும் அதைச் சார்ந்து வாழும் உயிரினங்களுக்கு அமைவிடமும் உருவாக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்திற்கான கருத்து கேட்பு கூட்டம், பெருங்குடி மாநகராட்சி வார்டு 184வது அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கூட்டம் துவங்குவதற்கு முன்னதாக, குப்பை கிடங்கில் அமைய உள்ள பூங்கா பற்றிய விளக்க காணொலி திரையிடப்பட்டது.
அதில், தற்போதுள்ள குப்பை படிமங்களை அகற்றி, நிலத்தை சுத்தமாக்கி பூங்கா அமைத்தல் குறித்த வரைபட காட்சிகளும், பூங்கா திட்ட மதிப்பீடுகள், பூங்கா அமைப்பதற்கான வரைபடங்களும் செயல் விளக்கமாக காண்பிக்கப்பட்டது.
பூங்கா அமைய உள்ள 93 ஏக்கரில் 58 ஏக்கரில் பூங்காவும், 23 ஏக்கரை நீர்நிலையாகவும், 11 ஏக்கரில் கட்டடங்களும் அமைப்பது குறித்த காணொலி காட்சி திரையிடப்பட்டது.
கூட்டத்தில் சோழிங்கநல்லுார் தி.மு.க., - எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ், சென்னை மாநகராட்சி இணை ஆணையர் சங்கர்லால் குமாகத், பெருங்குடி மண்டல குழு தலைவர் ரவிசந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பள்ளிக்கரணை,பெருங்குடி, வேளச்சேரி மடிப்பாக்கம், துரைப்பாக்கம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்பு சங்க நிர்வாகிகள், நீர்நிலை ஆர்வலர்கள், பகுதிவாசிகள் என, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அவர்கள், 'பெருங்குடி குப்பை கிடங்கில் பல்லுயிர் பூங்கா அமைக்கக்கூடாது' என எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.
கூட்டத்தில் அவர்கள் கூறியதாவது:
ஈரநிலம் பாதுகாப்புக்கான 'ராம்சார்' அங்கீகாரம் பெற்றுள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், சிமென்ட் கலவையை பயன்படுத்தி, பூங்கா அமைக்கக் கூடாது.
பூங்கா என்ற பெயரில் சதுப்பு நிலத்தில் கட்டுமானங்கள் எழுப்புவதை ஏற்க முடியாது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அமைந்திருக்கும் இந்த குப்பை கிடங்கை முழுமையாக அகற்றி, மீண்டும் சதுப்பு நிலமாக இவ்விடத்தை மாற்றி அமைப்பதே சரியானது.
ஒவ்வொரு மழைக்காலத்திலும் சதுப்பு நிலம் வெள்ளத்தால் நிரம்பி வழிகிறது. இங்கு பூங்கா அமைப்பதால், அந்தப் பூங்காவும் வெள்ளத்தில் மூழ்கி, பயனற்றுப் போகும்.
இதற்கு பதிலாக சோழிங்கநல்லுார் தொகுதியில் பராமரிப்பின்றி, பாழடைந்த நிலையில் உள்ள 60க்கும் மேற்பட்ட ஏரிகளில், சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கலாம்.
இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.
'மக்கள் கருத்துக்களின் அடிப்படையில் முடிவுகள் மேற்கொள்ளப்படும்' என சோழிங்கநல்லுார் எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் தெரிவித்தார்.