/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆமை வேகத்தில் வடிகால் பணி வடபழனிவாசிகள் அதிருப்தி
/
ஆமை வேகத்தில் வடிகால் பணி வடபழனிவாசிகள் அதிருப்தி
ADDED : பிப் 02, 2024 12:19 AM

வடபழனி,
சென்னை அசோக் நகர் முதல் கோயம்பேடு வரை உள்ள 100 அடி சாலை, மாநில நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் உள்ளது. இச்சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் உள்ளது.
இதில் பல இடங்களில், மழைநீர் வடிகால் முறையாக இணைக்கப்படாமல், துண்டு துண்டாக காட்சியளித்தது. இதையடுத்து, 100 அடி சாலையில் விடுபட்ட மழைநீர் வடிகால் பகுதிகளை இணைக்க, மாநில நெடுஞ்சாலை துறை முடிவு செய்தது.
அதன்படி, 1.7 கி.மீ., துாரத்திற்கு 11 கோடி ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதில், வடபழனி 100 அடி சாலை அழகிரி தெரு அருகே, மழைநீர் வடிகால் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
கடந்த இரண்டு மாதங்களாக பணிகள் மந்தமாக நடந்து வருவதால், பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதையடுத்து, 100 அடி சாலையில் இருந்து அழகிரி தெருவிற்குச் செல்ல, வடிகால் குறுக்கே பலகை அமைக்கவில்லை.
இதனால், பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த மழைநீர் வடிகால் பணிகளின்போது, குடிநீர் குழாய் உடைக்கப்பட்டதால், அப்பகுதிக்கு குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளது.
எனவே, மழைநீர் வடிகால் பணியை நெடுஞ்சாலை துறை விரைந்து முடிக்கவும், குடிநீர் குழாயை சீர் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து பகுதிமக்கள் கூறியதாவது:
அழகிரி தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. தெருவின் குறுக்கே பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால், பள்ளி செல்லும் குழந்தைகள், பணிக்குச் செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். பாதசாரிகள் கடந்து செல்ல மழைநீர் வடிகால் குறுக்கே பலகையும் அமைக்கவில்லை.
பணிகள் மந்தமாக நடப்பதால், வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

