/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆடிட்டரை காரில் கடத்தி 10 லட்சம் ரூபாய் பறிப்பு
/
ஆடிட்டரை காரில் கடத்தி 10 லட்சம் ரூபாய் பறிப்பு
ADDED : ஜூலை 20, 2024 03:14 PM
கோவை: ஆடிட்டரிடம் ரூ.10 லட்சம் ரொக்கம், தங்க நகை பறித்த மூவரை கைது செய்த போலீசார், முக்கிய குற்றவாளியை பிடிப்பதற்கு, தேனி விரைந்துள்ளனர்.
கோவை சாய்பாபா காலனி, கே.கே.புதுாரை சேர்ந்தவர் பின்சி லாசரஸ் போஸ்,48. 'ஆடிட்டிங்' மற்றும் ஹோட்டல் மேலாண்மை தொழில் செய்து வருகிறார். இவர் தனது முகநுால் பக்கத்தில், ஹோட்டல் மேலாண்மை பணி தொடர்பாக விளம்பரம் செய்திருந்தார்.
இதை பார்த்து, தேனி மாவட்டத்தை சேர்ந்த பிருந்தா என்பவர், பின்சி லாசரஸ் போசை தொடர்பு கொண்டு, தனக்கு சொந்தமாக தேனியில் உள்ள மலைப்பகுதியில் ஹோட்டல் இருப்பதாகவும், அதை குத்தகைக்கு விடுவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசுவதற்கு தன்னால் நேரில் வரமுடியாது என்பதால், தனக்கு வேண்டியவர்களை அனுப்பி வைப்பதாகவும், பிருந்தா கூறியுள்ளார். ரூ.10 லட்சம் ஏற்பாடு செய்து வைக்கவும் அவர் கூறிய நிலையில், கடந்த, 17ம் தேதி மதியம், 2:00 மணிக்கு மூன்று பேர், கோவைக்கு காரில் வந்தனர்.
காரில் ஏறிய பின்சி லாசரஸ் போசை, சாய்பாபா காலனி அடுத்த ஜீவா நகரில் உள்ள காலியிடத்துக்கு அழைத்து சென்றனர்.
அங்கு, திடீரென கத்தியை காட்டி மிரட்டி, ரூ.10 லட்சம் பணம், மூன்று மொபைல் போன்கள், 4.25 சவரன் நகையை பறித்துக்கொண்டு, பின்சி லாசரஸ் போசை வெளியே தள்ளிவிட்டு தப்பினர்.
இதுகுறித்து, சாய்பாபா காலனி போலீசில் பின்சி லாசரஸ் போஸ் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி, ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த விஷ்ணு,38, கேட்டரிங் தொழில் செய்யும் அஸ்வின்,29, மற்றும் புலியகுளத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஜின்சன்,37, ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இவர்களிடமிருந்து ரூ.2 லட்சத்து, 99 ஆயிரம் ரொக்கம், 4.25 சவரன் தங்க நகை, மொபைல் போன்கள், கத்தி, கார் பறிமுதல் செய்யப்பட்டன. முக்கிய குற்றவாளியான பிருந்தாவை பிடிக்க, போலீஸ் தனிப்படை தேனி விரைந்துள்ளது.