/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இனி பறவைகளுக்கும் 'எக்ஸ்ரே' எடுக்கலாம்! கோவை வனக்கல்லுாரியில் வந்தது புது வசதி
/
இனி பறவைகளுக்கும் 'எக்ஸ்ரே' எடுக்கலாம்! கோவை வனக்கல்லுாரியில் வந்தது புது வசதி
இனி பறவைகளுக்கும் 'எக்ஸ்ரே' எடுக்கலாம்! கோவை வனக்கல்லுாரியில் வந்தது புது வசதி
இனி பறவைகளுக்கும் 'எக்ஸ்ரே' எடுக்கலாம்! கோவை வனக்கல்லுாரியில் வந்தது புது வசதி
ADDED : ஜூலை 28, 2024 12:58 AM

கோவை;சிறு வனவிலங்குகள், பற வைகளுக்கு எலும்பு முறிவைக் கண்டறிவதற்காக, புதிய எக்ஸ்ரே இயந்திரம், கோவை வனக்கல்லூரி வளாகத்தில் உள்ள, பறவைகள் மறுவாழ்வு மையத்தில் நிறுவப்பட்டுள்ளது.
வனத்துறையால் நடத்தப்படும் பறவைகள் மறு வாழ்வு மையத்தை, 'அனிமல் ரெஸ்க்யூயர்'அமைப்பு பராமரித்து வருகிறது.
இந்த மையத்தில், நோயுற்ற வனப்பறவைகள், அடிபட்ட, காயமுற்றவை, எலும்பு முறிவுற்றவை, தாய்ப் பறவையால் தனித்து விடப்பட்டவை, பறவை வளர்ப்போரிடம் இருந்து மீட்கப்பட்ட பறவைகள் பராமரிக்கப்படுகின்றன.
இங்கு பராமரிக்கப்படும் பறவைகள், தேவாங்கு, கீரி, மரநாய் போன்ற சிறு பாலூட்டிகள், தானாக இரை தேடும் அளவுக்கு நலம் பெற்றதும், மீண்டும் வனத்துக்குள் விடப்படுகின்றன.
ஓரிரு வளர்ப்புப் பறவைகள் தனித்து வாழ இயலா நிலையில், மையத்திலேயே தொடர்ந்து பராமரிக்கப்படுகின்றன.
இந்த பறவைகள் மற்றும் சிறு வனவிலங்குகள், எலும்பு முறிவால் பாதிக்கப்பட்டால், தனியார் எக்ஸ் ரே மையங்களில் பேசி, அனுமதி பெற்று, பல்வேறு சிரமங்களுக்கு இடையில் எக்ஸ் ரே எடுக்க வேண்டியுள்ளது. அடிபட்ட பறவைகள், விலங்குகளை எக்ஸ் ரே மையத்துக்கும், பாதுகாப்பு மையத்துக்கும் அடிக்கடி அலைக்கழிக்க வேண்டியுள்ளது.
எனவே, பறவைகள் பாதுகாப்பு மையத்துக்கு, தனியார் பங்களிப்புடன் ரூ. 9 லட்சம் மதிப்பில் ஒரு எக்ஸ்ரே இயந்திரம் வாங்கப்பட்டது.
எக்ஸ்ரே இயந்திரத்தை, பறவைகள் பாதுகாப்பு மையத்துக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வுக்கு, இந்திய வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு மையத்தின் மூத்த விஞ்ஞானி நாகராஜன் தலைமை வகித்தார். தலைமை வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.
இந்த எக்ஸ்ரே மையத்தில், வனப்பறவைகள் மற்றும் சிறு வனவிலங்குகளுக்கு மட்டுமே எக்ஸ் ரே எடுக்கப்படும்.
வளர்ப்புப் பறவைகள், பிராணிகளுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட மாட்டாது. இந்த இயந்திரத்தின் வருகையால், பறவைகள், சிறு பிராணிகள் இன்னும் குறுகிய காலத்துக்குள் நலம் பெற வகை செய்யப்பட்டுள்ளதாக, வனத்துறையினர் தெரிவித்தனர்.
கோவை, காட்டன் சிட்டி ரோட்டரி கிளப் உதவி கவர்னர் பிரேம்குமார், வனத்துறை மருத்துவர் சுகுமார், 'அனிமல் ரெஸ்க்யூயர்' நிர்வாகி வின்னி பீட்டர், வனத்துறையினர், ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மையத்தில் பராமரிக்கப்பட்டு வந்த, 10 கிளிகள் சுதந்திரமாக விடுவிக்கப்பட்டன.