/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஸ் ஸ்டாப்களில் நிழற்குடை இல்லை வெயிலில் காயனும், மழையில் நனையனும்! பயணிகளுக்கு கிடைக்குமா தீர்வு
/
பஸ் ஸ்டாப்களில் நிழற்குடை இல்லை வெயிலில் காயனும், மழையில் நனையனும்! பயணிகளுக்கு கிடைக்குமா தீர்வு
பஸ் ஸ்டாப்களில் நிழற்குடை இல்லை வெயிலில் காயனும், மழையில் நனையனும்! பயணிகளுக்கு கிடைக்குமா தீர்வு
பஸ் ஸ்டாப்களில் நிழற்குடை இல்லை வெயிலில் காயனும், மழையில் நனையனும்! பயணிகளுக்கு கிடைக்குமா தீர்வு
ADDED : ஜூலை 19, 2024 12:13 AM

கோவை:கோவை நகரில் பெரும்பாலான பஸ் ஸ்டாப்களில், பயணிகளுக்கான நிழற்குடைகள் இல்லாததால் வெயிலிலும், மழையிலும் பஸ்சுக்காக நின்று, மக்கள் அவதிப்பட வேண்டிய நிலை உள்ளது.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், நுாற்றுக்கணக்கான பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இவற்றில் பாதிக்கும் குறைவான இடங்களில் மட்டுமே, பயணிகள் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் நிழற்குடைகளே இல்லாததால், பயணிகள் ரோட்டோரத்தில் நிற்க வேண்டியுள்ளது.
அவினாசி ரோடு, ஆறு வழிச்சாலையாக இருக்கும்போதே, பெரும்பாலான பஸ் ஸ்டாப்களில் பயணிகள் நிழற்குடைகள் உட்பட எந்தவொரு அடையாளமும் இருந்ததில்லை. ரயில்வே ஸ்டேஷன் ரோடு, திருச்சி ரோடு உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மட்டுமே, அதிகளவிலான நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனை அருகே அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான நிழற்குடை, அங்கு வரும் பல ஆயிரம் மக்களுக்கு பெரிதும் பயனளிப்பதாக பாராட்டைப் பெற்றுள்ளது.
இதேபோல, மக்கள் நடமாட்டமும், அதிகப் போக்குவரத்தும் உள்ள இடங்களில், ஒரே பஸ் ஸ்டாப்பில் இரண்டு, மூன்று நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், குனியமுத்துார், குறிச்சி, சரவணம்பட்டி, காளப்பட்டி, வடவள்ளி, வீரகேரளம் போன்ற பகுதிகளில், ஒன்றிரண்டு பஸ் ஸ்டாப்களில் கூட, நிழற்குடை அமைக்கப்படவில்லை.
வடவள்ளி ரவுண்டானா மற்றும் மருதமலை தேவஸ்தானம் பள்ளிக்கு அருகில், சமீபத்தில் மாநகராட்சி நிர்வாகத்தால் பயணிகள் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் கருப்பராயன் கோவில் பகுதியில், பயணிகள் நிழற்குடை ஓரிடத்தில் இருக்க, பஸ்கள் வேறிடத்தில் நிறுத்தப்படுகின்றன. சரவணம்பட்டி பகுதியிலும் பல பஸ் ஸ்டாப்களில் மக்கள் ரோட்டில்தான் நின்று பஸ் ஏறுகின்றனர்.
இந்த ஆண்டில், கோடை வெயிலும் கொடூரமாக இருந்த நிலையில், அப்போது இங்கு வெயிலில் காய்ந்தபடி நின்ற மக்கள், இப்போது தொடர்மழையில் நனைந்து கொண்டே, பஸ்சுக்காகக் காத்திருக்கும் அவல நிலை தொடர்கிறது. முன்பு போல, பயணிகள் நிழற்குடைகளில் விளம்பரங்கள் இல்லாமல், மாநகராட்சி நிர்வாகமே இவற்றை அமைத்துத் தருவது, நல்லதொரு மாற்றத்தைக் காண்பிக்கிறது.
ஆனால் அதே நேரத்தில், மாநகராட்சிப் பகுதி முழுவதும் உள்ள பஸ் ஸ்டாப்களை ஆய்வு செய்து, பயணிகள் நிழற்குடை இல்லாத இடங்களைப் பட்டியலிட்டு, அந்த இடங்களில் இவற்றை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
இதுகுறித்து, கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ''எந்தெந்த இடங்களில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டுமென்று சாலை பாதுகாப்புக்குழு பட்டியல் கொடுத்தால், எம்.பி., எம்.எல்.ஏ., தொகுதி நிதி அல்லது மாநகராட்சி நிதியில் அதைச் செய்து கொடுப்பதற்குத் தயாராகவுள்ளோம்.'' என்றார்.
எனவே, இதற்காக அரசுத்துறைகளை ஒருங்கிணைத்து, ஆய்வு செய்து, பட்டியல் தயாரித்துத் தர வேண்டியது, மாவட்ட சாலை பாதுகாப்புக்குழுவின் தலைவராகவுள்ள கலெக்டரின் கடமையாகும்.