/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
களி மண் பூமியில் வீடு கட்டுவது பாதுகாப்பானதா?
/
களி மண் பூமியில் வீடு கட்டுவது பாதுகாப்பானதா?
ADDED : ஜூன் 08, 2024 12:47 AM

கோயமுத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர் சங்கம் (காட்சியா) சார்பில், கட்டுமானப் பணி மேற்கொள்ளும் வாசகர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கிறார், சங்கத்தின் துணைத் தலைவர் செவ்வேள்.
நான் சமீபத்தில் வாங்கிய மனையிடத்தில், களிமண் 14 அடி ஆழம் வரை உள்ளது. வீடு கட்டலாமா? புளோரிங் இறங்கிவிடும் என்று கூறுகிறார்கள்.
-சுரேஷ், ராமநாதபுரம்.
தாராளமாக கட்டலாம். ஒரு தகுந்த பொறியாளரின் ஆலோசனையுடன், பைல் (pile ) பவுண்டேஷன் முறையில் அஸ்திவாரம் எடுத்து, பேஸ்மென்ட் புளோரிங் அமைக்கும் முன், கிராவல் மண் நிறைத்து, நன்கு கன்சாலிடேஷன் செய்து, ஆர்.சி.சி., மேட் அமைத்து, அதன் பின் டைல்ஸ் அமைத்தால் புளோரிங் இறங்காது.
எங்கள் அபார்ட்மென்ட் அண்டர் கிரவுண்ட் பார்க்கிங் ஏரியாவில், சுவர்களில் அடிக்கடி ஈரம் மற்றும் பெயின்ட் உரிந்து வருகிறது. எப்படி இதை சரி செய்யலாம்?
-ராதாகிருஷ்ணன், ஒண்டிப்புதுார்.
உங்கள் அபார்ட்மென்ட் அண்டர் கிரவுண்ட் சுற்றுச்சுவரின் வெளிப்புறத்தில், மழைநீர் அல்லது கழிவு சேம்பர் உடைந்து, நீர் தேங்கி இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து, முதலில் நீர் கசிவு அல்லது தேங்குதல் ஆகியவற்றை சரி செய்ய வேண்டும். பின், அண்டர் கிரவுண்ட் சுற்றுச்சுவரில் தரமான வாட்டர் ப்ரூப்பிங் செய்தால், இப்பிரச்னை வராது.
எனது சைட்டில் தோண்டினால், 5 அடி ஆழத்திலேயே தண்ணீர் வருகிறது. வீடு கட்டினால் பலமுள்ளதாக இருக்குமா
- நிலவழகன், ஆவாரம்பாளையம்.
கண்டிப்பாக வீடு கட்டலாம். நில மட்டத்துக்குக் கீழே அஸ்திவாரம் அமைக்கும்போது, சில முன்னேற்பாடுகள் செய்தால் போதும். பம்பிங் வாயிலாக நீரை தொடர்ந்து வெளியேற்றி, ஆர்.சி.சி., போடும்போது, சில மிக்ஸிங் அளவீடுகள் மற்றும் கால்சியம் க்ளோரைடு கொண்ட கெமிக்கல் கலந்து கடைபிடித்தால் போதும். ஒரு தகுந்த பொறியாளர் கண்காணிப்பில் செய்தால் நல்லது.
மண் போட்டு மூடிய கிணற்றின் மேல், ஒரு ஒர்க் ஷாப் ஷெட் கட்டலாம் என்று இருக்கிறேன். வேண்டாம் என்று சொல்கிறார்கள். ஆலோசனை கூறுங்கள்.
-ரவி, தாராபுரம்.
கிணற்றை, எந்த மாதிரி மண்ணைக் கொண்டு மூடினார்கள், குப்பை கழிவுகளை கொண்டு மூடினார்களா, பழைய கட்டடக் கழிவுகளைக் கொண்டு மூடினார்களா என்று அறிந்து கொண்டால், அதற்குத் தகுந்த மாதிரி பவுண்டேஷன் டிசைன் செய்து கட்டலாம்.
அறியாவிட்டால், பாதுகாப்பு முறைகளை கட்டாயம் கையாள வேண்டும். கால்வேலியம் சீட் ஷெட் அமைத்துக்கொள்ளலாம். ரேப்ட் ஆர்சிசி பவுண்டேஷன் முறையில் அமைக்கலாம். கிணறு இருந்த பகுதி முழுவதும் நிலத்தின் கீழ், எப்போதும் நீர் புகா வண்ணம் கட்டாயம் பாதுகாக்க வேண்டும்.
நீர் புகுந்தால், (variable settlement) முறையற்ற இறக்கங்கள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. தகுந்த கட்டமைப்பு பொறியாளர் மேற்பார்வையின் கீழ், இப்பணிகளை மேற்கொள்வது நல்லது. ஆர்.சி.சி., கட்டடம் கட்டினால், மிக அதிக செலவு மற்றும் செட்டில்மென்ட் வாய்ப்புகள் ஏற்படும். தவிர்ப்பது நலம்.
ஏற்கனவே இருந்த பழைய தார்சு கட்டடத்துடன், ஒரு புதிய கட்டடம் கட்டியுள்ளேன். புதிய கட்டடம் தரமாக உள்ளது. ஆனால், பழைய, புதிய கட்டடம் இணையும் இடத்தில், நீர் கசிவு ஏற்படுகிறது. இது எதனால்?
-கிருஷ்ணன், சுந்தராபுரம்.
ஏற்கனவே உள்ள கட்டடத்தை, புதிய கட்டடத்துடன் இணைக்க கவனமாக திட்டமிட வேண்டும். சுமை தாங்கும் காரணிகள், கட்டடத்தின் நீளம் மற்றும் 'எக்ஸ்பான்ஷன் ஜாயின்டுகள்' ஆகியவை கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
ஏற்கெனவே, மொட்டை மாடியில் நீர் செல்லும் வாட்டம் எவ்வாறு உள்ளது, நீங்கள் அதனை மாற்றியுள்ளீர்களா என்று குறிப்பிடவில்லை. அதையும் சரி செய்ய வேண்டும். புதிய கான்கிரீட் சுருங்கும் தன்மை உடையது.
அது நீர்க்கசிவுகளுக்கு வழிவகுக்கிறது. தரமான, நவீன கட்டட கெமிக்கல்கள் கொண்டு எளிதாக தீர்வு காணலாம். அதற்கான வாட்டர் புரூப் நிபுணர்களை அணுகவும்.