/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காமராஜர் பிறந்த நாள் விழா; கோவையில் கொண்டாட்டம்
/
காமராஜர் பிறந்த நாள் விழா; கோவையில் கொண்டாட்டம்
ADDED : ஜூலை 15, 2024 11:51 PM

கோவை;காமராஜர் பிறந்த நாள், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளிலும், கல்வி வளர்ச்சி நாள் ஆக நேற்று கொண்டாடப்பட்டது.
n அவினாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, தலைமையாசிரியை நளினி தலைமை வகித்தார். அவினாசிலிங்கம் பல்கலையின் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் குருஞானாம்பிகை சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கினார்.
n காட்டூரில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ட்ரீம் சிறப்பு பள்ளியில், மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி (ஓபிசி பிரிவு) செயல் தலைவர் பழனிசாமி தலைமை வகித்து, காமராஜரின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மனோகரன், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பேக், நோட்டு, புத்தகம் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாணவர்கள் காமராஜர் வேடம் அணிந்து வந்திருந்தனர். தொடர்ந்து, காமராஜர் குறித்த கவிதை, கட்டுரை, பாடல், பேச்சுப் போட்டி உள்ளிட்டவை நடைபெற்றன.
n அனுப்பர்பாளையம், டாக்டர் நஞ்சப்பா சாலையில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில், மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற முதல் மூன்று மாணவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் காமராஜரின் வரலாறு குறித்து, மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். தொடர்ந்து, மாணவர்களுக்கு மதியம் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டு, கல்வி வளர்ச்சி நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
n ஒத்தக்கால் மண்டபத்தில் பிரீமியர் நகர் அருகேயுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் முதல்வர் காமராஜரின், 122வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் (பொறுப்பு) மூர்த்தி தலைமை வகித்தார், மாணவர்களுக்கு பாட்டு, பேச்சு, நடனம், இசைக்கருவி வாசித்தல், கட்டுரை, ஓவியம் வரைதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
ரோட்டரி கிளப் சாய்பாபா காலனி சார்பில் தலைவர், துணைத்தலைவர், செயலாளர் உள்ளிட்டோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். நாடார் சங்க கொள்கை பரப்பு செயலாளர் பொன் செல்வராஜ், வணிகர் சங்க பேரமைப்பின் இருதயராஜா, நாடார் சங்க பேரமைப்பு தலைவர் டேவிட் ஆகியோர், கல்வி வளர்ச்சி நாள் குறித்து பேசினர்.
மாணவர்களுக்கு இனிப்புடன் வெஜிடபிள் பிரியாணி, முட்டை கிரேவி மதிய உணவாக வழங்கினர்.