/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஆகாயம் போல் விரிந்திருந்தது கண்ணதாசனின் கவிதை மனம்'
/
'ஆகாயம் போல் விரிந்திருந்தது கண்ணதாசனின் கவிதை மனம்'
'ஆகாயம் போல் விரிந்திருந்தது கண்ணதாசனின் கவிதை மனம்'
'ஆகாயம் போல் விரிந்திருந்தது கண்ணதாசனின் கவிதை மனம்'
ADDED : ஜூன் 17, 2024 12:27 AM

கோவை;'' கண்ணதாசனின் கவிதை மனம் ஆகாயம் போல் விரிந்திருந்தது.சித்தர்கள் போல் தத்துவங்களை திரையிசை பாடல்களில் எழுதிய கவிஞர் கண்ணதானின் பாடல்கள் தான் என்னை கவிஞனாக்கியது.'' என, பாடலாசிரியர் பழனிபாரதி பேசினார்.
கோவையில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் கண்ணதாசன் கழகம் சார்பில், கண்ணதாசன் விருது வழங்கும் விழா, கிக்கானி பள்ளி அரங்கில் நேற்று நடந்தது.
விழாவுக்கு தலைமை வகித்த ரமணி சங்கர், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் கிருஷ்ணன் ஆகியோர், இந்த ஆண்டுக்கான கண்ணதாசன் விருதை வழங்கினர்.
திரைப்பட பாடலாசிரியர் பழனிபாரதி, எழுத்தாளர் அ.வெண்ணிலா சார்பில் அவரது தோழி லோகமாதேவி ஆகியோர் விருதை பெற்றுக்கொண்டனர்.
விருது பெற்ற சினிமா பாடலாசிரியர் பழனிபாரதி பேசியதாவது:
'எங்கே வாழ்க்கை தொடங்கும், அது எங்கே எவ்விதம் முடியும்' என்று அலைந்து திரிந்த கவிஞர் கண்ணதாசனுக்கு, முதல் சினிமா பாடலை எழுதும் வாய்ப்பு கோவையில் தான் கிடைத்தது. 1948ம் ஆண்டு கோவையில் இருந்த ஜூபிடர் பிலிம் தயாரித்த 'கன்னியின் காதலி' என்ற படத்தில்தான் அவர் முதல் பாடலை எழுதினார். கண்ணதாசனின் திரை வாழ்க்கை துவங்கிய இந்த கோவை மண்ணில் இருந்து அவர் பெயரில் இந்த விருதை பெறுவதில் நான் பெருமைப்படுகிறேன். 'வசந்தக்கால நதிகளிலே வைரமணி நீரலைகள்' போல் தமிழர்களின் நெஞ்சங்களில் கண்ணதாசனின் பாடல்கள் நிறைந்துள்ளன. 'மனமிருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்' என்று பாடும் அளவுக்கு கண்ணதாசனின் கவிதை மனம் ஆகாயம் போல் விரிந்திருந்தது. சித்தர்கள் போல் தத்துவங்களை திரையிசை பாடல்களில் எழுதிய கவிஞரின் பாடல்கள் தான் என்னை கவிஞனாக்கியது. காலத்தால் அழியாத பாடல்களை தந்த இந்த கண்ணதாசனின் புகழ் காற்றுள்ள வரை வாழும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
'கண்ணதாசன் பார்த்த அரசியல்' என்ற தலைப்பில் கவிஞர் மரபின்மைந்தன் முத்தையா, 'கண்ணதாசன் பாடிய அழகியல்' என்ற தலைப்பில் இசைக்கவி ரமணன் ஆகியோர் பேசினர்.