/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யானைகளால் வீடுகள் சேதம் :தடுக்க நடவடிக்கை அவசியம்
/
யானைகளால் வீடுகள் சேதம் :தடுக்க நடவடிக்கை அவசியம்
ADDED : ஜூன் 08, 2024 01:42 AM

தொண்டாமுத்தூர்;தொண்டாமுத்தூர் சுற்றுப்பகுதிகளில், காட்டு யானைகளால் வீடுகள் சேதமடைவது அதிகரித்து உள்ளதால், வனத்துறையினர் ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட நல்லூர் வயல், ஈடன் கார்டன் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு புகுந்த ஒற்றைக்காட்டு யானை, இரண்டு ஓட்டு வீடுகளை உடைத்து சேதப்படுத்தியது.
நள்ளிரவில், வீட்டிற்குள் இருந்தவர்கள், காட்டு யானையின் சத்தம் கேட்டு, உயிரை காப்பாற்றிக்கொள்ள கட்டிலுக்கு கீழ் ஒளிந்து கொண்டனர். யானை, வீட்டை உடைத்து, வீட்டிற்குள் இருந்த சோபா உள்ளிட்ட பொருட்களையும் சேதப்படுத்தியது.
போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட குப்பேபாளையத்தில் புகுந்த, 2 காட்டு யானைகள், விளை நிலங்களை சேதப்படுத்தியதோடு, குமார் என்பவரின் வீட்டையும் சேதப்படுத்தியது.
காட்டு யானைகள், வீடுகளை சேதப்படுத்துவது அதிகரித்துள்ளதால், உயிரிழப்புகள் ஏற்படும் முன், வனத்துறையினர் ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும்.
வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் வெளியேறும் போதே, அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.