/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அமைக்க எதிர்ப்பு
/
மாநில நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அமைக்க எதிர்ப்பு
ADDED : ஜூன் 17, 2024 12:25 AM
கோவை;மாநில நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அமைவதற்கு சாலை பணியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தமிழகத்திலுள்ள மாநில நெடுஞ்சாலைத்துறை, சாலைகளை பராமரித்தல், மேம்படுத்துதல் மற்றும் கிராமப்பகுதிகளுக்கு சாலை வசதி ஏற்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்கிறது.
மாநில நெடுஞ்சாலைத்துறையை மறுசீரமைப்பதாக கூறி, நபார்டு, கிராம சாலைகள், திட்டம், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை நெடுஞ்சாலைத்துறையுடன் இணைக்க தமிழக அரசு திட்டமிட்டது.
தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அமையும் பட்சத்தில், 3,500 க்கும் மேற்பட்ட சாலைப்பணியாளர்கள், சாலைஆய்வாளர்கள் பணியிடம் ஒழிக்கப்படும். அதோடு மாநில நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைத்து கட்டணம் வசூலிக்கப்படும்.
இதுபற்றி நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், ''10 தலைமை பொறியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிர்வாகத்தை ஒரே தலைமை பொறியாளரின் கீழ் சென்னையில் இருந்து இயக்கும் வகையில் கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.
மறுசீரமைப்பு என்பது, ஓய்வு பெற்ற அதிகாரிகளை மீண்டும் பணிக்கு கொண்டு வருவதற்கான திட்டமாகவே உள்ளது. தற்போது தலைமை பொறியாளர் முதல் அலுவலக உதவியாளர்கள் வரை நெடுஞ்சாலைத்துறையில் 6,320 பணியாளர்கள் உள்ளனர்.
இவர்கள் இல்லாமல், திட்டம் சார்ந்த பணியாளர்களாக சாலை பணியாளர்கள் 10,000 பேர், சாலை ஆய்வாளர்கள் 2,000 பேர் உள்ளனர். மொத்தம் 18,000 பணியாளர்கள் இத்துறையில் பணிபுரிகிறார்கள். 3,000 காலிப்பணியிடங்கள் உள்ளன.
தேசியநெடுஞ்சாலை ஆணையத்தை போல தமிழக அரசும் மாநில நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தை உருவாக்க முடிவு செய்துள்ளது.
''இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்கு பதிலாக ஓய்வு பெற்றவர்களை மீண்டும் அதே பணியில் நியமிக்க கூடிய நடவடிக்கைகள் நடந்து வருகிறது. இதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்'' என்றனர்.
இதை கண்டித்து தமிழகம் முழுக்க பல கட்ட போராட்டங்களை தொடர்ந்து, வரும் 19 அன்று தமிழகத்திலுள்ள கோட்டப்பொறியாளர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.