/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.ஏ.பி., காண்டூர் கால்வாய் புதுப்பிப்பு பணியில் சிக்கல்; முட்டுக்கட்டை போடும் வனத்துறை
/
பி.ஏ.பி., காண்டூர் கால்வாய் புதுப்பிப்பு பணியில் சிக்கல்; முட்டுக்கட்டை போடும் வனத்துறை
பி.ஏ.பி., காண்டூர் கால்வாய் புதுப்பிப்பு பணியில் சிக்கல்; முட்டுக்கட்டை போடும் வனத்துறை
பி.ஏ.பி., காண்டூர் கால்வாய் புதுப்பிப்பு பணியில் சிக்கல்; முட்டுக்கட்டை போடும் வனத்துறை
ADDED : ஜூன் 16, 2024 03:31 AM

உடுமலை: பி.ஏ.பி., திட்டத்தில், காண்டூர் கால்வாய் புதுப்பிக்கும் பணி இறுதி கட்டத்தில் உள்ள நிலையில், 'டனல்' பகுதி ரோடு அமைக்கும் பணிக்கு வனத்துறை அனுமதி மறுப்பால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இத்திட்டத்தில், தொகுப்பு அணைகளில் சேமிக்கப்படும் மழைநீர், மேற்கு தொடர்ச்சி மலைச்சரிவில் அமைக்கப்பட்ட காண்டூர் கால்வாய் வாயிலாக, திருமூர்த்தி அணைக்கு கொண்டு வரப்பட்டு, பாசனத்துக்கு வினியோகிக்கப்படுகிறது.
திட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த காண்டூர் கால்வாய், 49.3 கி.மீ., துாரம் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைச்சரிவு, பாறைகள் உருண்டு விழுதல், மரம் விழுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், கால்வாய் உடைப்பு, கரை சரிவு ஏற்பட்டு வந்தது.
மேலும், கால்வாய் அமைத்து, 50 ஆண்டுகளுக்கு மேலான நிலையில், கரைகள், தளம் வலுவிழந்தும், பழுதடைந்தும் இருந்ததால், திறக்கப்படும் நீரில், 30 சதவீதம் வரை இழப்பு ஏற்பட்டது. இதனால், பாசன நீர் வினியோகத்தில் சிக்கல் ஏற்பட்டதால், முழுமையாக புதுப்பிக்க வேண்டும், என விவசாயிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர்.
பணி துவக்கம்
இதனையடுத்து, 2014ல், 240 கோடி ரூபாய் செலவில், காண்டூர் கால்வாய் புதுப்பிக்கப்பட்டது. ஆனால், கி.மீ., 30.100 முதல், 49.300 வரையான கடைசி பகுதியில், பல இடங்களில் பணிகள் நிலுவையானது. விடுபட்ட பகுதிகளை புதுப்பிக்க, 72 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
இந்த நிதியில், ஆண்டு தோறும், இரு மண்டல பாசன காலம் நிறைவடைந்ததும் பணி மேற்கொள்ளப்பட்டது. இரு ஆண்டுகளில், விடுபட்ட பகுதிகளில் ஏறத்தாழ, 3 கி.மீ., துாரம் புதுப்பிக்கப்பட்டது. நடப்பாண்டு, இறுதி கட்டமாக, விடுபட்ட பகுதிகளில் புதுப்பிக்கும் பணி நடக்கிறது.
இறுதி கட்டம்
தற்போது, நல்லாறு அணை பகுதியில், 34வது கி.மீ.,, 35.500 மற்றும், 37வது கி.மீ., களில், மூன்று பிரிவுகளில், மொத்தம், 700 மீட்டர் நீளம் பணி நடக்கிறது.
பழைய கட்டுமானங்கள் உடைத்து, அகற்றப்பட்டு, தளம் மற்றும் இரு கரைகளுக்கு, கம்பிகள் கட்டி, முழுவதும் கான்கிரீட் கால்வாயாக மாற்றப்படுகிறது. இப்பணிகளை ஆக., மாதத்துக்குள் நிறைவு செய்து, பாசனத்திற்கு நீர் திறக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
முட்டுக்கட்டை
காண்டூர் கால்வாயில், ஒரு சில இடங்களில் மலையை குடைந்து, 'டனல்' வழியாக நீர் கொண்டு வரப்படுகிறது. இப்பகுதிகளில், ஆய்வு மற்றும் அவசர கால பாதிப்பை உடனடியாக சரி செய்யும் வகையில், 37வது கி.மீ.,ல், ஒரு 'டனல்' மற்றும் உயரமான மலைப்பாதையை கடக்கும் வகையில், 5.5 கி.மீ.,நீளத்திற்கு ரோடு அமைந்துள்ளது.
நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு மட்டுமன்றி, நுாற்றுக்கணக்கான விவசாயிகளுக்கும், வனத்துறையினருக்கும் இந்த ரோடு பயனுள்ளதாக உள்ளது. காண்டூர் கால்வாய் புதுப்பிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, ரோடு புதுப்பிக்க, 4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போது, பணியை துவக்க வனத்துறையினர் அனுமதி மறுப்பதோடு, மத்திய அரசு அனுமதி பெற வேண்டும், என தடுத்து வருகின்றனர். இதனால், பணி மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தடை கூடாது
ஏற்கெனவே, 60 ஆண்டுகளாக பயன்பாட்டிலுள்ள ரோட்டை புதுப்பிக்க, அனுமதி மறுப்பதால், காண்டூர் கால்வாய் கண்காணிப்பு, பராமரிப்பு மற்றும் மழை காலங்களில் வெள்ள பாதிப்புகளை தடுக்க, அவசர கால மதகுகளை திறப்பதில் பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே, கால்வாய் ரோட்டை புதுப்பிக்க வனத்துறை தடை விதிக்க கூடாது, என அதிகாரிகளும், விவசாயிகளும் வலியுறுத்தியுள்ளனர்.