/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மர்ம சரக்கு' குடித்த இருவருக்கு வாந்தி, பேதி
/
'மர்ம சரக்கு' குடித்த இருவருக்கு வாந்தி, பேதி
ADDED : ஜூன் 30, 2024 02:34 AM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, 'மர்ம சரக்கு' குடித்த இருவருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டு, கோவை தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். கள்ளச்சாராய பீதியில் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே மஞ்சநாயக்கனுாரை சேர்ந்த கட்டட தொழிலாளி மகேந்திரன், 40. அதே பகுதியை சேர்ந்த டீக்கடை உரிமையாளரான பா.ஜ., ஒன்றிய செயலர் ரவிச்சந்திரன், 55. நேற்று முன்தினம், மகேந்திரன், ரவிச்சந்திரன் இருவருக்கும் வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது. பொள்ளாச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இருவரும், கோவை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
இருவரும் சாராயம் குடித்ததாக தகவல் பரவியதையடுத்து பரபரப்பு ஏற்பட்டது. ஆனைமலை இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் கிராம மக்களிடம் விசாரணை நடத்தினர். 'மப்டி'யில் போலீசார் வீடு, வீடாகவும், சந்தேக பகுதிகளிலும் சோதனையிட்டனர்.
இதில், கிராமத்தில் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற போது சரக்கு குடித்ததில் உடல்நல பிரச்னை ஏற்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். எங்கிருந்து 'சரக்கு' வாங்கி வந்தனர் என போலீசார் விசாரித்தனர்.
திருமூர்த்தி அருகே, மாவடப்பு வனப்பகுதியில் ஒருவரிடம் வாங்கி வந்து கடந்த, 27ம் தேதி மஞ்சநாயக்கனுாரை சேர்ந்த ராஜா, 49, செந்தில்குமார், 48, ராமகிருஷ்ணன், 40, செந்தில்குமார், 30, மகேந்திரன், 40, ஆகியோர் குடித்தனர் என, தெரியவந்தது.
நேற்று முன்தினம், மகேந்திரன், ரவிச்சந்திரன் இருவரும், டாஸ்மாக் மதுவுடன், மாவடப்பில் இருந்து வாங்கி வந்த சரக்கை கலந்து குடித்ததாகவும், அதில் ஒவ்வாமை ஏற்பட்டதாகவும் தெரிய வந்தது.
இதையடுத்து, கோவை, திருப்பூர் மாவட்ட போலீசார், வனத்துறையினர், மாவடப்பு, குருமலை, குழிப்பட்டி, காட்டுப்பட்டி ஆகிய செட்டில்மென்ட் பகுதிகளில், தீவிர விசாரணை மேற்கொண்டனர். சரக்கு விற்றது தொடர்பாக, மாவடப்பு செட்டில்மென்ட்டை சேர்ந்த ராமசாமி என்பவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
போலீசார் கூறியதாவது:
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவிச்சந்திரன் எழுத்து வாயிலாக தெரிவித்த தகவலின் படி, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், அங்கலகுறிச்சி மதுக்கடையில் இருந்து முத்துக்குமார் என்பவர் மதுபானம் வாங்கி வந்துள்ளார். அதை, ரவிச்சந்திரன் டீக்கடை அருகே உள்ள வீட்டு வளாகத்தில் அமர்ந்து, திறந்தவெளியில் இருந்த நீருடன் கலந்து, மகேந்திரனுடன் சேர்ந்து குடித்ததாகவும், அதனால், ஒவ்வாமை ஏற்பட்டு வாந்தி, பேதி ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். மாசடைந்த நீரின் மாதிரியும், பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.