/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வயலுக்கு தண்ணீர் பாய்ச்சலாம்! 'அக்ரி இன்டெக்ஸ்-2024'ல் 'ஆகா' தொழில்நுட்பங்கள்
/
வயலுக்கு தண்ணீர் பாய்ச்சலாம்! 'அக்ரி இன்டெக்ஸ்-2024'ல் 'ஆகா' தொழில்நுட்பங்கள்
வயலுக்கு தண்ணீர் பாய்ச்சலாம்! 'அக்ரி இன்டெக்ஸ்-2024'ல் 'ஆகா' தொழில்நுட்பங்கள்
வயலுக்கு தண்ணீர் பாய்ச்சலாம்! 'அக்ரி இன்டெக்ஸ்-2024'ல் 'ஆகா' தொழில்நுட்பங்கள்
ADDED : ஜூலை 14, 2024 01:08 AM

ஈர்க்கும் இயந்திரங்கள்
உழவு செய்ய டிராக்டர்கள் இருந்தாலும், களை எடுக்க ஆட்களையே நம்பியிருந்தனர் விவசாயிகள். தற்போது அவற்றுக்கும் தீர்வாக, சிறு சிறு மினி டிராக்டர் முதல் கையால் களையெடுக்கும் இயந்திரங்கள் வரை அறிமுகமாகியுள்ளன.
பவர் டில்லர்கள், அதில் பயன்படுத்தும் கருவிகள் ஏராளமாக உள்ளன. நிலத்தை சமன்படுத்துதல், விதை விதைத்தல், களை எடுத்தல், செடிகளுக்கு இடையே குறுகிய அளவில் களை எடுத்தல், பாத்தி செய்தல் என பல்வேறு பயன்பாட்டிற்கான கருவிகள் உள்ளன.
டிராக்டரில் இணைத்து வரப்புகளை அமைக்கும் கருவிகள் கண்காட்சியில் கவர்ந்தன. சேற்று உழவில் வரப்புகளை அமைத்து, வயல்களுக்கு நீர் தேக்கத்தை ஏற்படுத்த இக்கருவி பயன்படுகிறது.
தண்ணீர் பாய்ச்ச தொழில்நுட்பம்
செயற்கை நுண்ணறிவு, இன்டர்நெட் இணைப்பு, தொலைத்தொடர்பு சேவைகளை கொண்ட கருவிகளை பயன்படுத்தி, விவசாய நிலத்துக்கு நீர் பாய்ச்சுதல், சொட்டுநீர் அமைத்தல், ஈரப்பதத்தை அறிதல், மோட்டர் இயக்குதல், மின்சார கருவிகளை கட்டுப்படுத்துதல் போன்றவைகளை உருவாக்கியுள்ளனர்.
விரல் நுனியில் விவசாயம் என்ற அடிப்படையில், கிணற்றில் உள்ள தண்ணீரை 'பம்ப்' செய்து, சொட்டு நீர் பாசனம் மூலமாக, ஒவ்வொரு பயிருக்கும் பாய்ச்சலாம்; ஒரே நேரத்தில் ஐந்து இடங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வசதி இருக்கிறது; ஒவ்வொரு குழாயிலும் வால்வுகள் பொருத்தப்பட்டுள்ளன.
இதற்கென பிரத்யேகமாக வடிவமைத்துள்ள 'கன்ட்ரோல் யூனிட்'டில் சிம்கார்டு போட வேண்டும். அதன்பின், நம்மிடம் உள்ள 'ஸ்மார்ட் போனில் இருந்து பச்சை நிற பட்டனை அழுத்தினால் போதும்; மோட்டார் 'ஆன்' ஆகி, நிலங்களுக்கு நிலங்களுக்கு செல்லும்; சிவப்பு நிற பட்டனை அழுத்தி, தண்ணீரை நிறுத்திக் கொள்ளலாம்.
இவற்றை கேட்க கேட்க மலைப்பாக இருக்கிறதென்றால், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து சிலர், இங்குள்ள தங்கள் விவசாய நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சி வருகிறார்கள் என்பதை அறிந்தால், மெய் சிலிர்க்க வைக்கிறது.
சோலார் பேனல் மின்சாரத்தை பயன்படுத்தி, நீர் பாய்ச்சும் வால்வுகளை திறக்கவும், மூடவும் பயன்படும் கருவிகள் காட்சிக்கு உள்ளன.
மூன்று ரூபாய்க்கு மரக்கன்று
விவசாயிகளின் நலனுக்காகவும், சமுதாயத்தின் நலனுக்காகவும், ஈஷாவின் 'காவேரியின் கூக்குரல்' என்ற இயக்கம் சார்பாக, மண் பரிசோதனைகளை செய்து வருகிறது. 3 ரூபாய்க்கு மானிய விலையில் வழங்கப்படுகின்றன. செண்பகம், மகிழம், மந்தாரை, சரக்கொன்றை, புளி, கடுக்காய், விளாம்பழம், வில்வம், கொய்யா, மாதுளை, சிறு நெல்லி, பெருநெல்லி, பாதாம் உள்ளிட்ட பூ மரம், நிழல் மரம், பழ மரக்கன்றுகள் ஒவ்வொன்றும், 7 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.
நர்சரிக்கென ஓர் இடம்
கண்காட்சியில், நர்சரிக்கென ஓரிடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. தென்னை, பலா, புளி, பெருநெல்லி, கொய்யா, எலுமிச்சை, முள்சீதா, மாதுளை, நாவல், சப்போட்டா, அல்போன்சா, நீலம் மாம்பழ வகைகள், வாட்டர் ஆப்பிள், வியட்நாம் சிவப்பு பலா, சிங்கப்பூர் பலா மரக்கன்றுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
ராஜஸ்தான் ரதி
நாட்டு மாடுகள் கண்காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த காங்கேயம் காளைகள் உள்ளன. இவை தவிர, ராஜஸ்தான் ரதி, பஞ்சாப் சாகிவால், குஜராத் கிர் வகை மாடுகள் பார்வையாளர்களை கவர்கின்றன.
பால் உற்பத்தி பெருக்கலாம்
கால்நடைகள் பால் உற்பத்தியை நாளொன்றுக்கு, 500 மில்லி முதல் ஒரு லிட்டர் வரை அதிகரிக்கவும், சினைப்பருவத்தில் கூட பால் சுரக்கும் அளவை அதிகரிக்கும் வகையிலான திரவம் விற்பனை செய்யப்படுகின்றன.
பால் கறவை இயந்திரம்
இயந்திரங்கள் பயன்படுத்தி, ஒரே நேரத்தில் ஏழு மாடுகள் வரை பால் கறக்கலாம். எங்கு வேண்டுமானாலும் நகர்த்தி செல்லலாம்; 25 லிட்டர் கேன் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஆயிரம் ரூபாய் முன்பணம் செலுத்தி, இயந்திரம் பெற்றுச் செல்லலாம் என்கிற சலுகையும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
தானியம் சுத்தம் செய்ய இயந்திரம்
தானியங்களை உலர்த்தும்போது அவற்றில் கல், மண், துாசி கலப்பது வழக்கம். அவற்றை அகற்றுவதற்கும் இயந்திரங்கள் வந்து விட்டன. சல்லடை மற்றும் கன்வேயர் பெல்ட் வடிவில் அமைத்துள்ள இவ்வியந்திரங்களில் தானியங்கள் வரும்போது, கற்கள் தனியாக பிரிந்து சென்று விடுகின்றன. தானியங்கள் மற்றொரு புறம் வந்தடைகின்றன.
கன்ட்ரோல் யூனிட்டுகள்
மொபைல் போன் மூலமாக, தண்ணீர் பாய்ச்சும் வால்வுகள் மற்றும் மோட்டார்களை இயக்கும் கன்ட்ரோல் யூனிட்டுகள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு உள்ளன. ஒரே கன்ட்ரோல் யூனிட்டில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு மோட்டார்களை இயக்கும் வசதியும் இருக்கிறது.
சூரிய கூடார உலர்த்தி
வேளாண் பொருட்களை விளைவிப்பதோடு, அவற்றை உலர்த்தி, விற்பனைக்கு தயார்படுத்துவது மிகப்பெரிய சவாலான காரியமாக இருக்கிறது. உலர்த்துவதற்கு போதுமான தளம் இருப்பதில்லை. இதற்கு தீர்வு காண, வேளாண் பொறியியல் துறை சூரிய கூடார உலர்த்தியை பயன்படுத்த அறிவுரை சொல்கிறது.
விவசாயிகளை ஈர்க்கும் டிராக்டர்கள்
துல்லியமாக நெல் நடவு செய்வதற்கு டிராக்டர் வடிவில் இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நெல் நாற்றுகளை ஆறு வரிசைகளில் ஒரே மாதிரியாக நடவு செய்யும் திறனுள்ள இயந்திரத்தை, மஹிந்திரா நிறுவனம் காட்சிப்படுத்தியுள்ளது.
ஸ்வராஜ் நிறுவனம், பல்வேறு தொழில்நுட்ப வசதிகளுடன் ஐந்து வகையான புதிய டிராக்டர்களை அறிமுகம் செய்திருக்கிறது. ஈகோ மோட், பவர் மோட், ஹாலேஜ் மோட் என மூன்று தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இயக்கும் டிராக்டர்கள் காட்சிப்படுத்தியுள்ளது. கண்காட்சியில் புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, சிறப்பு ஆபராக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வழங்கப்படும் என, அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.
இந்திய விவசாயத்துக்கான ஜப்பானிய தொழில்நுட்பத்தில் உருவான டிராக்டர் வகைகளை 'குபோட்டா' நிறுவனம் காட்சிப்படுத்தியிருக்கிறது. நெல் நடவு செய்தல், களையெடுத்தல், ஏர் உழுதல் உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டுக்கு தேவையான டிராக்டர்கள் பல்வேறு டிசைன்களில் உள்ளன.
தன்னாட்சி பண்ணை
செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி, விளைநிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சும் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மண்ணின் ஈரத்தன்மையை உணர்ந்து, தேவைக்கேற்ப வால்வு தானாக திறந்து தண்ணீர் பாய்ச்சும்; சென்சார் மூலமாக தொட்டியில் தண்ணீர் இருப்பை கண்டறிந்து நிரப்பும். 50 சதவீதம் தண்ணீர் சேமிக்கலாம்; 20 சதவீதம் உரம் சேமிக்கலாம்; 50 சதவீதம் அதிக மகசூல் ஈட்டலாம் என உறுதியளிக்கின்றனர்.
பால் பண்ணை நடத்த விருப்பமா
பால்பண்ணை தொழில் செய்ய விரும்புவோருக்கு வழி காட்டப்படுகிறது. 20 மாடுகளுடன் சிறிய பண்ணை முதல், 500 மாடுகளுக்கும் அதிகமாக பெரிய பண்ணை நடத்துவதற்கு கொட்டகை அமைப்பது முதல் தீவன மேலாண்மை, இயந்திரங்கள் பயன்பாடு, மாடுகள் தேர்வு செய்வது, பால் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்வதற்கு கற்றுத் தருகின்றனர்.
சோலார் பயன்பாடு
சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் பெற்று தயாரித்து மோட்டார் இயக்குதல், வீடுகளுக்கு பயன்படுத்துதல் அவற்றுக்கான மானியம் பெறுதல் போன்ற வழிகாட்டுதல்களும் இடம் பெற்றுள்ளன. ஆட்டுப்பண்ணை வைத்தல், மாடுகள் வளர்த்தல், கோழி வளர்ப்பு அரசு மானியங்கள் போன்றவைகளும் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.