/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதிய கான்கிரீட்டிற்கு 28 நாள் 'கியூரிங்' செய்வது அவசியம்
/
புதிய கான்கிரீட்டிற்கு 28 நாள் 'கியூரிங்' செய்வது அவசியம்
புதிய கான்கிரீட்டிற்கு 28 நாள் 'கியூரிங்' செய்வது அவசியம்
புதிய கான்கிரீட்டிற்கு 28 நாள் 'கியூரிங்' செய்வது அவசியம்
ADDED : ஜன 27, 2024 12:08 AM
புதிய வீட்டிற்கு கான்கிரீட் அமைத்த பின்பு, 21 நாட்களில் சென்ட்ரிங்கை பிரிக்கலாம்; ஆனால் 28 நாட்களுக்கு க்யூரிங் செய்வது அவசியம் என்கின்றனர் பொறியாளர்கள்.
கட்டட கட்டுமான பணி மேற்கொள்ளும் வாசகர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கிறார். கோயம்புத்தூர் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கம் (காட்சியா) பொருளாளர் ரவிக்குமார்.
கவர் ப்ளாக் என்றால் என்ன? கான்கிரீட் வேலைகளில் கவர் ப்ளாக்கின் முக்கியத்துவம் என்ன?
-சுகுமார், ராமநாதபுரம்.
நாம் கட்டும் கட்டடங்களின் புட்டிங், பில்லர், பீம், லிண்டல், சன்சேடு, மேற்கூரை என அனைத்திலும் கம்பிகளை பயன்படுத்துகிறோம். நாம் பயன்படுத்தும் கம்பி, சூரிய ஒளி, மழைநீர் மற்றும் காற்றின் ஈரப்பதம் ஆகியவற்றால், துருபிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
துருப்பிடிக்காமல் தடுக்க, நாம் பயன்படுத்தும் கம்பியை சுற்றிலும் புட்டிங்காக இருந்தால் அதன் கம்பிக்கு அடிப்பகுதி மற்றும் சைடு பகுதியில், 50 எம்.எம்., அளவுக்கு கான்கிரீட் கட்டாயம் இருப்பது அவசியம்.
அதுபோல பில்லர், பீம், லிண்டல், சன்சேடு, மேற்கூரை என அனைத்து கம்பிகளின் அடி மற்றும் சைடு பகுதிகளில் முறையே 40 எம்.எம்., 25 எம்.எம்., 20 எம்.எம்., என கான்கிரீட் அமைக்க வேண்டும்.
அவ்வாறு கம்பியை சுற்றிலும், அமைக்கப்படும் கான்கிரீட்டையே, கவரிங் என்று அழைப்பார்கள். அந்த கவரிங், மேலே கூறியவாறு சரியான அளவுகளில் வைப்பதற்கு கடைகளில் ரெடிமேடாக சிமென்ட் கட்டிகள் விற்கிறார்கள். அதையே கவர் ப்ளாக் என்று அழைக்கின்றனர்.
என்னுடைய வீட்டில் மொசைக் பதித்துள்ளேன். இப்போது புதிதாக வந்த வெர்ட்டிபைடு டைல்ஸ் பதிக்க விரும்புகிறேன். அதற்கு, மொசைக் கற்களை உடைத்து நீக்க வேண்டுமா?
- செல்வராஜ், சீனிவாசபுரம்.
அவசியம் இல்லை. ஏசியன் பெயின்ட் நிறுவனத்தின் டைல்ஸ் பேஸ்ட் உபயோகித்து மொசைக் கற்களை உடைக்காமல், அதன் மீது டைல்ஸ் பதிக்கலாம். அதற்கு முன்பு தளத்தின் உயரத்தையும் கதவு அமைந்திருப்பதையும், கணக்கீடு செய்து கொண்டு சரியாக இருக்கும் பட்சத்தில் அமைத்துக்கொள்ளலாம்.
நான் கட்டும் புது வீட்டிற்கு, ரெடிமேடு நிலவு கதவுகள் வாங்கலாமா?
-பாபு, செட்டிபாளையம்.
நிஜமான உறுதியான தேக்கு உள்ளிட்ட, தரமான மரங்களால் நிலவு கதவுகள் தயாரித்து விற்பவர்களிடம், தாராளமாக வாங்கி பொருத்தலாம். இதனால் உங்கள் நேரமும் பணமும் மிச்சமாகும்.
நான் தற்போது புது வீடு கட்ட ஆரம்பித்து உள்ளேன். கான்கிரீட் வரை தேவையான சிமென்டை வாங்கி ஸ்டாக் வைக்கலாமா?
- பழனியப்பன், சுந்தராபுரம்.
கண்டிப்பாக கூடாது. சிமென்ட் தயாரித்த மூன்று மாதங்களுக்குள் உபயோகிக்க வேண்டும். இல்லை என்றால், அதன் வலிமையும், காரமும் குறைந்து கொண்டே செல்லும். எனவே, தேவைக்கு தகுந்த அளவு மட்டும் வாங்குவது நல்லது.
நான் கட்டும் புது வீட்டில், கான்கிரீட் அமைத்துள்ளேன். நான் சென்ட்ரிங்கை ஏழு நாட்களில் பிரிக்கலாமா?
- கவிராஜ், சுங்கம்.
கண்டிப்பாக கூடாது. உங்கள் கட்டடத்தின் அளவு எத்தனை அடி என்று கூறவில்லை. ஸ்பேன் (அளவு) மூன்று மீட்டருக்குள் இருந்தால், 14 நாட்கள் கழித்தும், மூன்று முதல் ஆறு மீட்டருக்குள் இருந்தால், 21 நாட்கள் கழித்தும் பிரிக்கலாம்.
ஆனாலும், 28 நாட்கள் கியூரிங் செய்வது அவசியம். இதனால் கட்டடம் மிகவும் உறுதியாக இருக்கும்.

