/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஆதார்' பதிவுக்கு கூடுதல் மையங்கள் தேவை! கிராம மக்கள் எதிர்பார்ப்பு
/
'ஆதார்' பதிவுக்கு கூடுதல் மையங்கள் தேவை! கிராம மக்கள் எதிர்பார்ப்பு
'ஆதார்' பதிவுக்கு கூடுதல் மையங்கள் தேவை! கிராம மக்கள் எதிர்பார்ப்பு
'ஆதார்' பதிவுக்கு கூடுதல் மையங்கள் தேவை! கிராம மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜன 26, 2024 12:41 AM
குடிமங்கலம்;ஆதார் அடையாள அட்டை திருத்தங்கள் மற்றும் புதிதாக பதிவு செய்ய, கூடுதலாக மையங்கள் ஏற்படுத்த வேண்டும் என மக்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை தாலுகாவில், 5 உள்வட்டங்களில், 75 வருவாய் கிராமங்கள் உள்ளன. அதிக மக்கள் தொகையை உள்ளடக்கிய இத்தாலுகாவில், அரசின் பல்வேறு இ - சேவைகளை பெற, போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை.
குறிப்பாக, ஆதார் அட்டை புதிதாக பதிவு செய்யவும், திருத்தங்கள் செய்யவும், மக்கள் பல நாட்கள் அலைக்கழிக்கப்படும் அவல நிலை உள்ளது. தற்போது, உடுமலை தாலுகா அலுவலகத்திலுள்ள இ - சேவை மையம், தலைமை தபால் நிலையம், நகராட்சி அலுவலகம் மற்றும் இரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், மட்டுமே, ஆதார் அட்டை குறித்த சேவைகள் வழங்கப்படுகின்றன.
இந்த மையங்களில், நாளொன்றுக்கு, 25க்கும் குறைவான டோக்கன்கள் மட்டும் வினியோகிக்கப்படுகிறது.
இதனால், தொலைதுார கிராமங்களில் இருந்து வரும் மக்கள் நாள்தோறும், உடுமலைக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்ல வேண்டியுள்ளது.
மேலும், போதிய பஸ் வசதி இல்லாத குடிமங்கலம் ஒன்றிய கிராமங்களை சேர்ந்த மக்கள், அதிகாலையில் கிளம்பி, காலை, 8:00 மணியில் இருந்து நகரிலுள்ள மையங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.
5 வயதுக்கு மேற்பட்ட, உட்பட்ட குழந்தைகளுக்கு, ஆதார் அடையாள அட்டை பதிவு செய்ய வேண்டியுள்ளது. இந்த சேவை குறிப்பிட்ட மையங்களில் மட்டுமே வழங்கப்படுகிறது.
எனவே, நாள்தோறும், குழந்தைகளுடன், பெண்கள், நகருக்கு வந்து செல்லும் நிலை உள்ளது. இப்பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வாக, உடுமலை தாலுகாவில், இச்சேவையை மேற்கொள்ளும் மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
மேலும், உள்வட்டம் வாரியாக ஆதார் பதிவு மற்றும் திருத்தங்களுக்கான சிறப்பு முகாம்களை நடத்துவது அவசியமாகும். கிராமப்புறங்களில், காட்சிப்பொருளாக உள்ள இ - சேவை மையங்களில், அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தினாலும், பல ஆயிரம் கிராம மக்கள் அலைக்கழிக்கப்படுவது தவிர்க்கப்படும்.

