/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
28 ஆண்டுகளுக்கு பின் தி.மு.க., வெற்றி வாகை!கோவையில் தடம் பதித்து சாதனை!
/
28 ஆண்டுகளுக்கு பின் தி.மு.க., வெற்றி வாகை!கோவையில் தடம் பதித்து சாதனை!
28 ஆண்டுகளுக்கு பின் தி.மு.க., வெற்றி வாகை!கோவையில் தடம் பதித்து சாதனை!
28 ஆண்டுகளுக்கு பின் தி.மு.க., வெற்றி வாகை!கோவையில் தடம் பதித்து சாதனை!
ADDED : ஜூன் 05, 2024 02:00 AM

கோவை:கோவை லோக்சபா தொகுதியை, 28 ஆண்டுகளுக்கு பின், தி.மு.க., கைப்பற்றியுள்ளது.
கோவை மாவட்டம் அ.தி.மு.க., கோட்டை என்றே வழக்கமாக சொல்லப்படும். அதற்கேற்ப, 2021 சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 10 தொகுதிகளையும் அ.தி.மு.க., கூட்டணி வென்றது. அதிபெரும்பான்மை பெற்று, தமிழகத்தில் தி.மு. க., ஆட்சி அமைத்தபோதிலும், கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாதது, தி.மு.க., தலைமைக்கு நெருடலாக இருந்தது. ஆட்சி அமைத்த பிறகு, கோவை மக்களின் கவனத்தை ஈர்க்க, தி.மு.க., அரசு கூடுதல் கவனம் செலுத்தியது.
பொறுப்பு அமைச்சராக செந்தில்பாலாஜியை நியமித்து, மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகள் வேகப்படுத்தப்பட்டன. அவரது தலைமையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்தித்து, கோவை மாநகராட்சியை தி.மு.க., கைப்பற்றியது. அத்தேர்தலில் மூன்று வார்டுகளில் மட்டுமே அ.தி.மு.க., வெற்றி பெற்றது. பா.ஜ., ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை.
கண்காணித்த தி.மு.க.,
செந்தில்பாலாஜி சிறைக்கு சென்ற பிறகு, அமைச்சர் முத்துசாமி, கோவை மாவட்டத்துக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். என்றாலும், உளவுத்துறை போலீசார் மூலமாக, கோவை நிகழ்வுகளை தி.மு.க,, தலைமை கண்காணித்தது.
சட்டசபை தேர்தலில் இழந்த செல்வாக்கை, லோக்சபா தேர்தலில் ஈடுகட்டினால் மட்டுமே, 2026 சட்டசபை தேர்தலை தைரியமாக எதிர்கொள்ள முடியும் என நினைத்தது.
அதனால், மா.கம்யூ., வசமிருந்த கோவை தொகுதியில் தி.மு.க., நேரடியாக போட்டியிட முடிவெடுத்தது. இதற்கு தி.மு.க., நிர்வாகிகள் ஆரம்பத்தில் தயக்கம் காட்டினர். சிறையில் இருக்கும் செந்தில்பாலாஜி தைரியம் கொடுத்ததும், துணிச்சலாக தி.மு.க., களத்தில் இறங்கியது.
அவரது ஆதரவாளரான, முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமாரை வேட்பாளராக அறிவித்தது. இவர், அ.தி.மு.க.,வில் இருந்து வந்தவர் என்பதால், கட்சியில் மூத்த நிர்வாகிகளே இல்லையா என்ற புகைச்சல் ஏற்பட்டது. இது, தேர்தல் பிரசாரத்தில் எதிரொலித்தது. சில பகுதிகளில் தி.மு.க.,வினர் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இத்தகவல் கட்சி தலைமைக்கு சென்றதும், தொகுதி பொறுப்பாளராக, தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நியமிக்கப்பட்டார்.
ஆலோசனை கூட்டம்
அவர், சட்டசபை தொகுதி வாரியாக, கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி, பணிகளை துரிதப்படுத்தினார். அதிருப்தியாளர்களை அழைத்து பேசி, சமரசம் செய்தார். தொழில்துறையினர், வர்த்தக துறையினர், தொழில்அமைப்புகள், சங்க நிர்வாகிகள் என பல தரப்பினரையும் நேரில் சந்தித்து பேசினார். அதேநேரம், உள்ளூர் நிர்வாகிகளுடன் வேட்பாளர் ராஜ்குமார், வீதி வீதியாக பிரசாரம் செய்தார்.
யாரேனும் வேட்பாளருக்கு எதிராக உள்ளடி வேலை செய்தால், கட்சி ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சி தலைமை எச்சரித்தது. முதல்வரின் மருமகன் சபரீசன் கோவையில் இரு நாட்கள் முகாமிட்டு, கள நிலவரத்தை விசாரித்து, நிர்வாகிகளுடன் பேசினார்.
இதன் பின், கட்சிக்கு கட்டுப்பட்டு, நிர்வாகிகள் தீவிரமாக பணிபுரிந்தனர். தேர்தல் பணிக்கு தேவையான பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. கட்சியினர் உழைப்பு மற்றும் கூட்டணி பலத்தால், 28 ஆண்டுகளுக்கு பின், கோவை லோக்சபா தொகுதியில், தி.மு.க., வெற்றியை பதிவு செய்துள்ளது.
இது கடந்த கால வரலாறு!
இதற்கு முன், 1996ல் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட ராமநாதன், 56.79 சதவீத ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். 1998ல் நடந்த தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் சுப்பையன், 37.86 சதவீத ஓட்டுகளுடன் இரண்டாமிடம் பெற்றார். 2014ல் தி.மு.க., சார்பில் கணேஷ்குமார் போட்டியிட்டார். இத்தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., - தி.மு.க., - காங்கிரஸ் - மா.கம்யூ., என அனைத்து கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டன.
இதில், அ.தி.மு.க., வேட்பாளர் நாகராஜ் வெற்றி பெற்று, எம்.பி.,யானார். தி.மு.க., வேட்பாளர் கணேஷ்குமார் மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டார்.
இரண்டு முறை தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்ததால், 2019 தேர்தலில் மா.கம்யூ.,வுக்கு தொகுதி தாரைவார்க்கப்பட்டது.
அப்போது, கூட்டணி பலத்தால் மா.கம்யூ., எளிதாக வெற்றி பெற்றது. இம்முறை (2024) கண்டிப்பாக வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்கிற இலக்கோடு, 10 ஆண்டுகளுக்கு பின், தி.மு.க., வேட்பாளர் மீண்டும் களமிறக்கப்பட்டார். திட்டமிட்டதை போல், 1996க்கு பின், 28 ஆண்டுகள் இடைவெளியில், கோவை தொகுதியில் தி.மு.க., வெற்றியை பதிவு செய்திருக்கிறது.