/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோடு புதுப்பிக்காததால் ஆவேசம்; மக்கள் மறியல்! சேறும், சகதியுமான ரோட்டில் வழுக்கல் பயணம்
/
ரோடு புதுப்பிக்காததால் ஆவேசம்; மக்கள் மறியல்! சேறும், சகதியுமான ரோட்டில் வழுக்கல் பயணம்
ரோடு புதுப்பிக்காததால் ஆவேசம்; மக்கள் மறியல்! சேறும், சகதியுமான ரோட்டில் வழுக்கல் பயணம்
ரோடு புதுப்பிக்காததால் ஆவேசம்; மக்கள் மறியல்! சேறும், சகதியுமான ரோட்டில் வழுக்கல் பயணம்
ADDED : ஜூலை 04, 2025 10:19 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, கல்லாபுரம் - மீனாட்சிபுரம் செல்லும் ரோடு சேதமடைந்ததால் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கிணத்துக்கடவு அருகே, கல்லாபுரம் முதல் மீனாட்சிபுரம் (மச்சண்ண கோவில்) செல்லும் ரோடு ஒரு கி.மீ., தூரம் உள்ளது. இந்த வழித்தடத்தில், தினம்தோறும் ஏராளமான டிப்பர் லாரிகள் பயணிக்கிறது. இதனால் ரோடு குண்டும் குழியுமாக மாறியுள்ளது. தற்போது, மழை பெய்வதால் தண்ணீர் தேங்கி, சேறும் சகதியுமாக காணப்படுகிறது.
இந்த ரோட்டை சீரமைக்க மக்கள் வலியுறுத்தியதை தொடர்ந்து, கடந்த 6 மாதங்களுக்கு முன் ரோடு சீரமைப்பு பணிகளுக்கு, பொள்ளாச்சி எம்.பி.,ஈஸ்வரசாமி தலைமையில் பூமி பூஜை நடந்தது. அதன் பின், இங்கு ரோடு பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
தற்போது, மழைப்பொழிவு அதிகரித்துள்ளதால் இப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இவ்வழியில் கனிமவள கற்கள் கொண்டு செல்லும் டிப்பர் லாரிகள், சேதமடைந்த ரோட்டில் பயணித்துக் கொண்டே இருப்பதால், பைக் ஓட்டுநர்கள் தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர்.
இதை, சரி செய்ய அருகில் உள்ள தனியார் குவாரி சார்பில் சேதமடைந்த பகுதிகளில், அவ்வப்போது மணல் கொட்டி சீரமைப்பு செய்யப்பட்டது.
ஆனால், தொடர்ந்து ரோடு சேதமடைந்து கொண்டே இருந்தது. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள், நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், கல்குவாரியில் இருந்து வெளியே சென்ற டிப்பர் லாரிகளும், குவாரிக்கு வந்த டிப்பர் லாரிகளும் நிறுத்தப்பட்டன. இதையடுத்து, கல்குவாரி நிர்வாகத்தினர், சம்பவ இடத்துக்கு வந்து மக்களிடம் பேச்சு நடத்தினர்.
ரோட்டின் ஒரு பகுதியை சரி செய்து கொடுப்பதாகவும், 10 மற்றும் 12 சக்கர டிப்பர் லாரிகள் இந்த ரோட்டில் வருவதை தவிர்ப்பதாகவும், குவாரி நிர்வாகம் தரப்பில் உறுதியளித்ததை தொடர்ந்து, மக்கள் கலைந்து சென்றனர்.
மக்கள் நலன் கருதி, பூமி பூஜை போடப்பட்ட ரோடு பணியை உடனடியாக துவங்க வேண்டும் என்று, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.