மூதாட்டியிடம் நகை பறிப்பு
கோவை: பீளமேட்டை சேர்ந்தவர் ஆதாயி, 67. இவர் இரவில் பீளமேடு தண்ணீர் பந்தல் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அவர் அருகே நடந்து வந்த ஒருவர், திடீரென ஆதாயி கழுத்தில் அணிந்திருந்த இரண்டு பவுன் தங்க நகையை பறித்து, தயாராக பைக்கில் நின்று கொண்டிருந்த மற்றொருவருடன் தப்பிச் சென்றார். ஆதாயி புகாரின்படி, பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பணம் திருடிய இளம்பெண் கைது
கோவை: கண்ணபிரான் மில் ரோட்டை சேர்ந்தவர் சரஸ்வதி, 61. இவர் நேற்று முன்தினம் பஸ்சில் டவுன்ஹாலில் இருந்து உக்கடம் சென்றார். அப்போது அருகே நின்றிருந்த பெண் ஒருவர் சரஸ்வதி கைப்பையில் இருந்த ரூ.5 ஆயிரத்தை திருடி, தப்ப முயன்றார். சரஸ்வதி சத்தம் போட்டு, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த பெண்ணை பிடித்து, உக்கடம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், பணம் திருடியது தாராபுரத்தை சேர்ந்த சுமதி, 31, என்பது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.--
பெண்ணுக்கு ஆபாச மெசேஜ்
கோவை: உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்தவர், 25 வயது இளம்பெண். உக்கடத்தில் உள்ள மருந்து கடையில் பணிபுரிந்து வருகிறார். இவரது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு கடந்த, 6ம் தேதி வாலிபர் ஒருவர் ஆபாசமாக பேசி, வாய்ஸ் மெசேஜ் அனுப்பினார். அதே வாலிபர் நேற்று முன்தினம் மருந்து கடைக்கு வந்து, ஏன் மெசேஜூக்கு பதில் தரவில்லை என கேட்டு தகராறில் ஈடுபட்டார். -இளம்பெண் புகாரின் படி, உக்கடம் போலீசார் கோவையை சேர்ந்த சாதிக், 28, என்பவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.--
போன், இயர்பேட் திருட்டு
கோவை: எஸ்.ஐ.எச்.எஸ்., காலனியை சேர்ந்தவர் விஜயகுமார், 41. கடந்த 13ம் தேதி வீட்டை பூட்டி வீட்டு வெளியில் சென்றிருந்தார். நேற்று முன்தினம் வீடு திரும்பிய போது, வீட்டின் பின்கதவு உடைக்கப்பட்டு, மொபைல்போன், இயர்பேட்ஸ், ரூ.2,000 ரொக்கம் திருடப்பட்டிருந்தது. அவர் அளித்த புகாரின் பேரில், சிங்காநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
சம்பளம் கேட்டவருக்கு கத்திக்குத்து
கோவை: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் சதீஸ்குமார், 22. கோவை சின்னியம்பாளையத்தில் தங்கி, கட்டட வேலைக்கு சென்று வருகிறார். இவருடன் பணிபுரிபவர் அய்யாசாமி, 35. இவர் சதீஸ்குமாரின் சம்பளத்தை பெற்றுக்கொண்டு தரவில்லை. இந்நிலையில், சதீஸ்குமார், அய்யாசாமி ஆகிய இருவரும், நேற்று முன்தினம் மது அருந்திவிட்டு வரும் போது சதீஸ்குமார் சம்பளத்தை கேட்டார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அய்யாசாமி, கத்தியால் சதீஸ்குமாரை குத்தினார். இதில் அவருக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில், சிங்காநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவாக உள்ள அய்யாசாமியை தேடி வருகின்றனர்.
கோவில் உண்டியல் உடைப்பு
கோவை: 100 அடி ரோட்டில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில், சக்தி முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் பூசாரியாக மணிகண்டன் இருந்து வருகிறார். நேற்று முன்தினம் காலை, கோவிலுக்கு வந்த மணிகண்டன் கோவிலின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டார். உள்ளே சென்று பார்த்த போது, உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த தொகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இந்து சமய அறநிலையத்துறை தலைமை செயல் அலுவலர் ராஜேஷ்க்கு தகவல் தெரிவித்தார். அவர் அளித்த புகாரின் பேரில், காட்டூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
பெண்ணிடம் நகை திருட்டு
கோவை: சுந்தராபுரம் ரெட்டியார் காலனியை சேர்ந்தவர் சோபனா, 27. இவர் நேற்று முன்தினம் பஸ்சில் சுந்தராபுரத்தில் இருந்து, டவுன்ஹால் பகுதிக்கு சென்றார். பஸ் பிரகாசம் நிறுத்தம் வந்ததும் இறங்கினார். அப்போது அவர் கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்க நகை காணாமல் போயிருந்தது. ஷோபனா புகாரின்படி, கடை வீதி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.--
கஞ்சா விற்ற இருவர் கைது
கோவை: சரவணம்பட்டி போலீசார் நேற்று முன்தினம், துடியலுார் ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது தனியார் கல்லுாரி அருகே சந்தேகம்படும்படி நின்றிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர். அதில் அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது. விசாரணையில், அவர்கள் சின்னவேடம்பட்டியை சேர்ந்த மதன், 20, கணபதியை சேர்ந்த பாலசுந்தரம், 27, என்பது தெரிந்தது. இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
சேவல் சண்டை
மதுக்கரை: பாலத்துறையிலிருந்துகுமாரபாளையம் செல்லும் சாலையில், ஒரு குவாரி அருகே சேவல் சண்டை நடப்பதாக, மதுக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற எஸ்.ஐ.,செந்தில்குமார் மற்றும் போலீசார், சேவல் சண்டையில் ஈடுபட்ட மரப்பாலத்தை சேர்ந்த குட்டைராஜா, ராஜா, தமிழ்செல்வன் உட்பட, 10 பேரை கைது செய்தனர். இரு சேவல்கள், ஆயிரத்து, 500 ரூபாய் ரொக்கம்பறிமுதல் செய்யபட்டது.
* க.க.சாவடி அருகே குமிட்டிபதியிலுள்ள காலியிடத்தில், சேவல் சண்டையில் ஈடுபட்ட தொண்டாமுத்துரை சேர்ந்த தினேஷ்குமார், பூபாலன்சாமி, பாலசுப்ரமணியன் உள்பட ஆறு பேரை எஸ்.ஐ.,குமரேசன் கைது செய்தார். இரு சேவல்கள், இரண்டாயிரத்து, 850 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
-வாலிபரை தாக்கிய இருவர் கைது
கோவை: செல்வபுரம் அடுத்த தெலுங்கு பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ், 25, தனியார் மருந்து கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவர் இரவில் ஆர்.எஸ்.புரம், டி.பி.ரோட்டில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு நண்பர்களுடன் சென்றார். டாஸ்மாக் பாரில் இருந்த சில வாலிபர்கள், பிரகாசிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கினர். பிரகாஷ் பலத்த காயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்ந்தனர். பிரகாஷ் புகாரின்படி, ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிந்து, புலியகுளத்தை சேர்ந்த ஆகாஷ், 25, பிரசாந்த் குமார், 33, ஆகிய இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

