ADDED : ஜன 26, 2024 11:13 PM
அன்னுார்: அல்லப்பாளையம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில், ஊராட்சி தலைவர் வெங்கிடுபதி தலைமை வகித்தார்.
பொதுமக்கள் பேசுகையில், 'பலருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிளீச்சிங் பவுடர் சரியாக துாவுவதில்லை. புகை மருந்து அடிப்பதில்லை' என புகார் தெரிவித்தனர்.ஊராட்சி நிர்வாகத்தினர் பதில் அளிக்கையில், 'டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால், சுகாதாரத் துறையில் இருந்து தகவல் தெரிவிப்பார்கள்.
ஒரு சிலருக்கு சாதாரண காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியில் பிளீச்சிங் பவுடர் தூவப்படும்' என்றனர்.
எனினும், இதுகுறித்து வாக்குவாதம் ஏற்பட்டதால், எஸ்.ஐ., ஆறுமுக நயினார் தலைமையில் போலீசார் கூட்டத்திற்கு வந்து விசாரித்தனர். இதை தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம், புகார் தெரிவிக்கப்பட்ட பகுதியில் பிளீச்சிங் பவுடர் துாவப்பட்டது.

