/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கெடுபிடிகளால் சிக்கி தவித்த பக்தர்கள்
/
கெடுபிடிகளால் சிக்கி தவித்த பக்தர்கள்
ADDED : ஜன 26, 2024 01:21 AM
வடவள்ளி:மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் தைப்பூச தேரோட்டத்திற்கு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சரியாக மேற்கொள்ளாததால், பக்தர்கள் சிரமத்திற்குள்ளாகினர்.
மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்வான, தேர் வடம் பிடித்தல் நேற்று நடந்தது. ஆனால். கோவில் நிர்வாகம் மற்றும் மாநகர போலீசார் சார்பில், சில விஷயங்களில் கூடுதலாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளாததால், பக்தர்கள் சிரமத்திற்குள்ளாகினர். அடிவாரத்தில் இருந்து, மலைமேல் கோவிலுக்கு செல்ல அடிவாரத்தில் வழக்கமாக பக்தர்கள் பஸ் ஏறும் இடம் மாற்றப்பட்டு, வேறுவழியாக பக்தர்கள் உள்ளே செல்லும் வகையில் அனுப்பினர். வழி மாற்றப்பட்டது குறித்து பேனர் ஏதும் வைக்கவில்லை. கோவில் நிர்வாகம் சார்பில், சுமார், 130 பேருக்கு பாஸ் வழங்கப்பட்டிருந்தது. அந்த பாஸ் பெற்றவர்கள் வாகனங்கள் மட்டுமே மலைமேல் அனுமதிக்கப்பட்டது. பக்தர்கள் அனைவரும், மலை மேல் உள்ள கார் பார்க்கிங்கில் இருந்து, பழைய படிக்கட்டு பாதை வழியாக மட்டுமே கோவிலுக்கு அனுப்பப்பட்டனர். இதற்காக, படிக்கட்டு பாதையில், தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. பல மணிநேரம் பக்தர்கள் படிக்கட்டு பாதையில் காத்திருந்தனர். அப்போது, குடிக்க தண்ணீர் கிடைக்காமலும் பக்தர்கள் சிரமப்பட்டனர். ஏராளமான பக்தர்கள் வந்ததால், தேரோட்டத்தின்போது, கூட்ட நெரிசல் ஏற்படக்கூடாது என, பக்தர்களை, தேரோட்டத்தின்போது, அருகில் விடவில்லை. பல மணி நேரம் காத்திருந்தும், தேரோட்டத்தை பக்தர்கள் காணமுடியாமல் போனது. ராஜகோபுரம் பகுதியில், பக்தர்கள் மேலே செல்ல முயன்றபோது, போலீசாருக்கும், பக்தர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

