/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிளை கால்வாயை புதுப்பிக்காததால் சிக்கல் சீசன்தோறும் பாதிப்பதாக வேதனை
/
கிளை கால்வாயை புதுப்பிக்காததால் சிக்கல் சீசன்தோறும் பாதிப்பதாக வேதனை
கிளை கால்வாயை புதுப்பிக்காததால் சிக்கல் சீசன்தோறும் பாதிப்பதாக வேதனை
கிளை கால்வாயை புதுப்பிக்காததால் சிக்கல் சீசன்தோறும் பாதிப்பதாக வேதனை
ADDED : ஜன 26, 2024 11:41 PM

குடிமங்கலம்: புதுப்பாளையம் கிளை கால்வாயை முழுமையாக புதுப்பித்து நீர் விரயத்தை தவிர்க்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் நீண்ட காலமாக வலியுறுத்தியும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
பி.ஏ.பி., பாசன திட்டத்தில், புதுப்பாளையம் கிளை கால்வாய் வாயிலாக, இரண்டாம் மற்றும் நான்காம் மண்டல பாசனத்தில், 14 ஆயிரம் ஏக்கர் வரை பாசன வசதி பெறுகிறது.
பிரதான கால்வாயில், பூசாரிபட்டி ஷட்டரில் இருந்து இந்த கால்வாய் பிரிகிறது. பயன்பாட்டுக்கு வந்த நீண்ட காலமாகியும் இந்த கால்வாய் முழுமையாக புதுப்பிக்கப்படவில்லை.
இதனால், கரை பல இடங்களில், சேதமடைந்து, மண் சுவராக மாறி விட்டது. இருபுறமும் செழித்து வளரும், சீமை கருவேல மரங்களால், கரை மேலும் வலுவிழந்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
பகிர்மான கால்வாய் பிரியும் ஷட்டர் பகுதிகளில், கால்வாய் உடைந்து காணப்படுகிறது. எனவே, பாசன காலத்தில் முழு கொள்ளளவு பாசன நீர் புதுப்பாளையம் கிளை கால்வாயில் திறக்கப்படுவதில்லை.
கடைமடை பகுதியில் போதியளவு தண்ணீர் கிடைக்காமல், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கிறது. எனவே கால்வாயை முழுமையாக புதுப்பிக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் நீண்ட காலமாக வலியுறுத்தியும், பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.
இது குறித்து தமிழக அரசுக்கு அப்பகுதி விவசாயிகள் அனுப்பியுள்ள மனு: புதுப்பாளையம் கிளை கால்வாய் முழுமையாக புதுப்பிக்கப்படாமல் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கிடைக்கும் பாசன நீரிலும் பற்றாக்குறை ஏற்பட்டு, மகசூல் குறைகிறது.
ஒவ்வொரு சாகுபடியிலும் நஷ்டத்தை சந்திக்கிறோம். எனவே, முழுமையாக கிளை கால்வாயை புதுப்பித்து, முழு கொள்ளளவில், தண்ணீர் வழங்க வேண்டும். அடுத்த சீசன் தண்ணீர் திறப்புக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

