/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுற்றுலா மையத்தில் யானை பொங்கல் விழா; வனத்துறைக்கு வலியுறுத்தல்
/
சுற்றுலா மையத்தில் யானை பொங்கல் விழா; வனத்துறைக்கு வலியுறுத்தல்
சுற்றுலா மையத்தில் யானை பொங்கல் விழா; வனத்துறைக்கு வலியுறுத்தல்
சுற்றுலா மையத்தில் யானை பொங்கல் விழா; வனத்துறைக்கு வலியுறுத்தல்
ADDED : ஜன 16, 2024 11:06 PM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே டாப்சிலிப்பில், சுற்றுலாப்பயணியர் வசதிக்காக, வழக்கம் போல யானை பொங்கல் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்டது உலாந்தி வனச்சரகம். இந்த வனச்சரகத்துக்கு உட்பட்ட டாப்சிலிப் சிறந்த சுற்றுலாத்தலமாக உள்ளது.
இங்கு, உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாநிலம், வெளி நாடு மற்றும் மற்ற மாவட்டங்களிலிருந்தும் சுற்றுலாப்பயணியர் வந்து செல்கின்றனர். அவர்கள் தங்கி, டாப்சிலிப் சுற்றி பார்ப்பதற்கு ஏதுவாக தங்கும் விடுதிகள் வனத்துறை சார்பில், அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், கோழிகமுத்தியில் யானைகள் முகாம் உள்ளன. டாப்சிலிப்பில் ஆண்டுதோறும் நடைபெறும் யானை பொங்கலை பார்க்க சுற்றுலாப்பயணிகள் அதிகளவு வந்து செல்வது வழக்கம்.
முகாமிலிருந்து யானைகள் குளிப்பாட்டி அலங்கரிக்கப்பட்டு, வரிசையாக டாப்சிலிப் பகுதிக்கு அழைத்து வரப்பட்டு, வரிசையாக நிறுத்தப்பட்டு கஜ பூஜை நடத்தப்படும். தொடர்ந்து, யானைகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறும்.
இந்நிலையில், கொரோனா பரவல், ஊரடங்கு காரணமாக யானை பொங்கல் விழா, கோழிகமுத்தி யானை முகாமிலேயே கடந்த, மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்படுகிறது.
நேற்று கோழிகமுத்தியில் விழா நடந்ததால், அனைத்து சுற்றுலாப்பயணியரும் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டது.
சுற்றுலாப்பயணியர் கூறியதாவது:
கோழிகமுத்தி யானைகள் முகாமிற்கு காலை, 7:30 முதல் மதியம், 2:00 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. அங்கு செல்ல வேண்டுமென்றால், வனத்துறை வாகனத்தில் மட்டுமே செல்ல முடியும்.
இதற்கு கட்டமாக, வேனில் செல்ல, ஒரு நபருக்கு, 236 ரூபாயும், ஜீப்பில் செல்ல, எட்டு பேருக்கு, 2,360 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
டாப்சிலிப்பில் ஆண்டுதோறும் நடைபெறும், யானை பொங்கல் விழாவை குடும்பத்துடன் கண்டுகளிக்க வருகிறோம். ஆனால், அதற்கு கட்டணம் செலுத்தி அங்கு செல்வதற்குள் விழா முடிந்து விடுகிறது.
மேலும், யானைகளும் தனித்தனியாக கட்டப்படுகிறது. இதனால், எங்களால் விழாவை காண முடியாமல், முகாமினை மட்டும் பார்த்து வரும் சூழல் உள்ளது. கூட்டம் அதிகமாக இருக்கும் சூழலில், வனத்துறை வாகனம் வரும் வரை காத்திருக்கும் சூழல் உள்ளது.
மேலும், கட்டணம் செலுத்த முடியாத நபர்கள், டாப்சிலிப் உடன் திரும்பும் நிலை உள்ளது. வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டால், 'கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பழங்குடியின மக்கள் விரும்புவதாலும், கோழிகமுத்தியிலேயே நடத்தப்படுவதாக கூறுகின்றனர். ஆனால், எங்களால் விழாவை காண முடியாத சூழல் உள்ளது.
மேலும், யானைகள் அணிவகுப்பு போன்ற நிகழ்வுகள் தற்போது இல்லாதது ஏமாற்றமாக உள்ளது. எனவே, வனத்துறை அதிகாரிகள் அடுத்தாண்டாவது டாப்சிலிப் பகுதியில் யானை பொங்கல் விழாவை நடத்தினால் பயனாக இருக்கும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

